பாரபட்சமின்றி வெளியாகும் செய்திகள்

பாரபட்சமின்றி வெளியாகும் செய்திகள்
Updated on
1 min read

“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூரை தொடர்ந்து திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையிலுள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் சமூக செயல்பாட்டாளர் ஷேக் அப்துல்லா பேசியதாவது:

நெல்லை மண்ணுக்கு வந்தபோது புதிய உற்சாகம் பிறக்கிறது. விடுதலை போராட்டத்தில் மிகமுக்கிய பங்கு வகித்த மண் இது. வ.உ.சி., பாரதி, தொமுசி ரகுநாதன், பாஸ்கர தொண்டமான், வல்லிகண்ணன், ஜானகிராமன், ஆ. சிவசுப்பிரமணியன், செ.திவான் என்று பலர் இந்த மண்ணை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைகளை நினைத்தால் மிகப்பெரிய சங்கடமாக இருக்கிறது. சமீபகாலமாக ஊடகங்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்துவருகின்றன. இந்நிலையில்தான் “தி இந்து” நாளிதழ் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் பாரபட்சமின்றி செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுகிறது.

வ.உ.சி. சிறையில் இருந்து வெளியே வந்தபோது அவரை வரவேற்க 2 அல்லது 3 பேர்தான் இருந்தனர். ஆனால் இப்போது என்ன நிலை. எதிலும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கொள்கைகளில் இருந்து மாறிவிட்டன.

கடலும் கடலை சார்ந்த பகுதிகளிலும் இருக்கும் கனிமங்கள் தேசத்தின் மிகப்பெரிய சொத்து. அவை கொள்ளை போவது குறித்து “தி இந்து” விரிவான கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. மணல் கொள்ளையின் பின்புலத்தில் சாதி, மதம் இருக்கிறது. ஆட்சியாளர்கள் துணைபோகிறார்கள். மீனவர்களை கடலோடிகள் என்று இந்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தற்போது வருங்காலமே இருண்டுவிடும் நிலைக்கு மதுவின் கொடுமை இருக்கிறது. அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றுதான் மசச்சார்பற்ற கொள்கைகள் வகுக்கப்பட்டன. அதிலிருந்து விலக கூடாது என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in