Last Updated : 07 Feb, 2014 07:07 PM

 

Published : 07 Feb 2014 07:07 PM
Last Updated : 07 Feb 2014 07:07 PM

இடிக்கப்பட்ட மருத்துவமனை கட்டப்படுவது எப்போது?- எதிர்பார்ப்பில் மதுரை செல்லூர் மக்கள்

மதுரை செல்லூர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை கட்டப்படாததால் எப்போது கட்டப்படும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தாகூர் நகரில் பல ஆண்டுகளாக மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இது 20-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் இயங்கி வந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30 பிரசவங்கள் வரை நடைபெற்றுள்ளன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பயனடைந்து வந்தனர்.

பணியாளர்கள் மாற்றம்

இந்த நிலையில், மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் இதை இடித்துவிட்டனர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே கட்டப்பட்ட ஸ்கேன் மையத்தையும் அதோடு சேர்த்து இடித்துவிட்டனர். எனவே, அங்கே பணியாற்றி வந்த செவிலியர் உள்ளிட்ட பணியாளர்கள் பக்கத்தில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபோல, அங்கே பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களும் வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை அந்த மருத்துவமனை கட்டப்படவில்லை.

எனவே, இந்த மருத்துவமனையைப் பயன்படுத்தி வந்த அந்தப் பகுதி பொதுமக்கள் தற்போது தங்களது மருத்துவத் தேவைக்காக வேறு அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும், கூலி வேலை செய்து வரும் இந்தப் பகுதி பொதுமக்கள் இதனால் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, இந்த மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: பல ஆண்டுகளாக இங்கே பிரசவ மருத்துவமனை இருந்து வந்தது. இதனால், இந்தப் பகுதி மக்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், ஸ்கேன் மையம் இருந்ததால் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து ஸ்கேன் எடுத்துச் செல்வார்கள். ஆனால், தற்போது மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் இரண்டும் இடிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட போது, விரைவில் கட்டி விடுவார்கள் என நினைத்தோம்.

ஆனால், இடித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த மருத்துவமனை கட்டப்படவில்லை. எனவே, இந்தப் பகுதி மக்கள் தற்போது பிரசவத்துக்காக வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், ஸ்கேன் எடுக்க தற்போது தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, இடிக்கப்பட்ட செல்லூர் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x