எங்கிட்ட மோதாதே.. நா ஈயாதி ஈயனடா!

எங்கிட்ட மோதாதே.. நா ஈயாதி ஈயனடா!
Updated on
1 min read

ஏதாவது முக்கியமாக நெட்டில் பார்க்கும்போதுதான், முதுகில் நம் கை எட்டாத் தொலைவில் உட்கார்ந்து கொசு ‘ஸ்டிரா’போடாத குறையாக ரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஆடாமல், அசையாமல் லாகவமாக கையைக் கொண்டு சென்றால் ‘பச்சக்’ என்று ஒரே அடியில் அடித்து காலி பண்ணிவிடலாம். ஆனால், ஏறக்குறைய கொசு அளவிலேயே இருக்கும் ஈயிடம் நம் பாச்சா பலிக்கிறதா? கையை எவ்வளவு நைசாக கொண்டு போனாலும் நூற்றுக்கு தொண்ணூறு ஈக்கள் தப்பிவிடுகின்றன. தப்பித்தவறி அடிபடும் அந்த பத்து சத ஈக்கள்கூட அனேகமாக உடம்பு சரியில்லாத, வயோதிக ஈயாகத்தான் இருக்கும். ஆறடி உயரம், ஆறறிவு உள்ள நம்மையே தம்மாத்தூண்டு ஈ எப்படி போக்குக் காட்டி தப்பிக்கிறது?

இதுதொடர்பாக அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரிப் பேராசிரியர் கெவின் ஹீலி தலைமையில் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பூச்சிகள், சிறு பறவைகள் ஆகியவற்றின் பார்வைத் திறன் தொடர்பாக வேறு குழுவினர் ஆய்வு செய்து திரட்டிய தகவல்கள், போட்டோக்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது. இதில் தெரியவந்த சுவாரஸ்ய தகவல்கள் பற்றி கெவின் ஹீலி கூறுகிறார்.. மனிதர்கள், பெரிய விலங்குகளைவிட சிறிய பூச்சிகளின் பார்வைத் திறன் அதிகம். ஈ போன்ற பூச்சிகளின் கூட்டுக் கண்கள் இதற்கு முக்கிய காரணம்.

சுற்றி நடக்கும் காட்சிகள் அனைத்தையும் ஒவ்வொரு ஃபிரேமாக நம் கண் கிரகிக்கிறது. ஒரு வினாடிக்குள் ஏராளமான காட்சிப் பதிவுகள் அடுத்தடுத்து கிரகிக்கப்படுவதால், தொடர்ச்சியாக ஒரு வீடியோ காட்சி போல அனைத்தையும் பார்க்கிறோம். இந்த விஷயத்தில், நம் கண்களைவிட ஈயின் கண் கில்லாடி. ஈயின் கண்களில் ஒரு வினாடி நேரத்துக்குள் மேலும் பல ஃபிரேம்கள் பதிவாகின்றன. வீடியோ காட்சியை ஸ்லோமோஷனில் பார்ப்பதுபோல, ஒவ்வொரு இம்மி அசைவும் ஈக்கு தனித்தனி ஃபிரேமாக, ஸ்லோமோஷனில் தெரிகிறது. உலகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஈ ஸ்லோமோஷனாகவே பார்க்கிறது. டென்ஷனாகி நாம் கையை உயர்த்தும்போது, ஒருவேளை கவனிக்காமல் விட்டாலும், கை நெருங்கி வந்து அடிக்கப்போகிற கண நேர ஃபிரேமில் ஈ உஷாராகி நகர்ந்துவிடும் ரகசியம் இதுதான். இதை ‘விஷுவல் இன்பர்மேஷன்’ என்கிறோம். ஒரு யானையின் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய காட்சியைக்கூட ஈ பார்த்துவிடும்.

மனிதரிலும்கூட ஒருவருக்கொருவர் விஷுவல் இன்பர்மேஷன் திறன் மாறுபடும். வயது ஆக ஆக, இத்திறன் குறையும். அதனால்தான், மேஜையில் கண் எதிரே இருக்கும் மூக்குக் கண்ணாடியை தாத்தாக்கள் மணிக்கணக்கில் தேடுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in