Last Updated : 07 Feb, 2017 10:25 AM

 

Published : 07 Feb 2017 10:25 AM
Last Updated : 07 Feb 2017 10:25 AM

சக மனிதர்களின் துயர் போக்கும் முயற்சிகளே ஆன்மிகத்தின் கடமை!- ஸ்வாமி விமூர்த்தானந்தருடன் ஒரு நேர்காணல்

பிப்ரவரி 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் ‘விவேகானந்த நவராத்திரி’யை முன்னிட்டு, சென்னை - மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் ஸ்வாமி விமூர்த்தானந்தருடன் சிறப்பு நேர்காணல்:

ஸ்வாமிஜி தங்களைப் பற்றிய அறிமுகம்?

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அடைக்கல மான, ஸ்வாமி விவேகானந்தர் காட்டிய பாதையை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் அனைவரும் பின்பற்றி வருகிறோம் என்பதே எங்களுக்கான சிறந்த அறிமுகம். 31 ஆண்டுகளாக மடத்தில் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளேன். இப்போது சென்னை மடத்தின் மேலாளராகப் பணிபுரிகிறேன். இதற்கு முன் மடத்தின் மாதாந்திர ஆன்மிக வெளியீடான ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ இதழின் ஆசிரியராக 15 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன்.

‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ இதழ் குறித்து சில செய்திகள்..?

ஆழ்வார்களும் நாயன்மார்களும் சிறந்த பக்தி இலக்கியங்களைப் படைத்தார்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் ஆன்மிகத்தைப் புறந்தள்ளிய இயக்கங்கள் வளரத் தொடங்கின. அப்போது ஆன்மிகம், சமுதாய மறுமலர்ச்சி, நமது பாரம்பரியம், இந்த மண்ணுக்கே உரிய சிறப்புகளைப் பற்றியெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற பேராவல் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்கு உதித்ததால், 1921-ம் ஆண்டு பிறந்ததுதான் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழ். இன்று சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பிரதிகள் வாசகர்களைச் சென்றடைகின்றன.

இந்த பக்தி இதழின் கோட்பாடுகள் என்ன?

நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியையும், ஆன் மிகத்தையும் இரண்டு முக்கியமான கருத்துகளாக ஸ்வாமி விவேகானந்தர் முன்வைக்கிறார். மனிதன் தெய்வீகமானவன். அவனுள் அளவற்ற ஆற்றல் புதைந்துள்ளது. அன்பு, ஆற்றல், அறிவு, பண்பு, பிறர் நலம் பாராட்டல், சக மனிதர்களின் துயர் போக்கும் முயற்சிகள் போன்றவற்றை வெளிக்கொணர்வதுதான் ஆன்மிகத்தின் கடமை.

இதுபோலவே ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ள பூரணத்துவத்தை வெளிக்கொணர் வதுதான் கல்வியாகும். கல்லுதல் என்ற வார்த்தையில் இருந்துதான் கல்வி என்பதே வந்தது. கல்லுதல் என்பதற்குத் தோண்டுதல் என்ற பொருளும் உண்டு. ஆகவே, மனிதன் தன்னைத் தானே தோண்டி, உள்நோக்கிப் பார்த்து, தனக்குள் இருக்கும் நல்ல விஷயங்களைக் கொண்டுவருவதுதான் கல்வியின் சிறப்பு. ஸ்வாமி விவேகானந்தரின் இந்த இரு கருத்து களை முன்னிலைப்படுத்துவதே ‘ஸ்ரீராம கிருஷ்ண விஜயம்’ இதழின் நோக்கம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்?

சென்னை மடத்தின் நிகழ்ச்சிகளைப் பற்றிய மாதாந்திரச் செய்தித் தொகுப்பு ஒன்றில் பகவான் ராமகிருஷ்ணரின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் நபர்களுக்கு அறுசுவை உணவு அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட ஸ்வாமி விவேகானந்தர் “அதெல்லாம் சரி, மக்களின் அறிவுக்கு என்ன கொடுத்தாய்?” என்று வினவினார். மனித குலம் மேம்பட சிந்தனைகளைத் தரும் சேவைகள் மிகவும் முக்கியம். இந்நாட்டில் தோன்றிய முனிவர்கள், ரிஷிகள், ஆச்சாரிய புருஷர்கள் ஆகியோருடைய சிந்தனைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, இக்காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் தொகுத்துக் கொடுத்துள்ளார் விவேகானந்தர்.

இதையெல்லாம் சமுதாயத்துக்கு எடுத்துச் செல்லும் அளப்பரியப் பணியை மேற்கொள்ளும் வகையில், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் கடந்த 110 ஆண்டுகளாக ஆன்மிக நூல்களை வெளியிட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் தமிழில் சுமார் 500 தலைப்புகளிலும், ஆங்கிலத்தில் 500 தலைப்புகளிலும் வெளியிட்டு வருகிறது.

இத்தகைய விலைமதிப்பில்லாப் பொக்கிஷங் களை மிகவும் குறைந்த விலையில் மக்களுக்கு அளித்து வருகிறீர்கள். இது எவ்வாறு சாத்தியமாகிறது?

இறையருளாலும், நல்ல மனம் படைத்த பல நன்கொடையாளர்களின் தொடர் உதவிகளாலும், பல தடைகளையும் மீறி இந்தப் பதிப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இணையதளம் மூலமாக இ-நூல்களையும் அளிக்கத் தொடங்கி உள்ளோம்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளைப் பற்றி சொல்லுங்களேன்...

‘‘நான் ஒரு நல்ல மனிதனாக வாழ, என்ன வழி’’ என்று ஒருவர் மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்டதற்கு சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளான ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள், மற்றும் அவருடைய உபதேசங்கள் அடங்கிய நூல்களைப் படிக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். இதிலிருந்தே எங்கள் வெளியீடுகளைப் பற்றிப் புரிந்துகொள்வீர்கள். இதேபோல் ஸ்வாமி விவேகானந்தரின் அமுத மொழிகள், அவர் உலகெங்கும் ஆற்றிய உரைகளும் இளைஞர்களை இன்றளவும் கவர்கின்றன. ‘அண்ணா’ சுப்பிரமணியன் அவர் களுடைய மகத்தான சேவை, உபநிடதங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் இறைவழிபாடு தொடர்புடைய நூல்களின் மொழிபெயர்ப்பு போன்றவற்றையும் இன்றளவும் பக்தர்கள் பெற்றுச் செல்கிறார்கள்.

உங்களின் ஈடுஇணையற்ற இத்தகைய சேவைப் பணிகள் தொடர்ந்து தடைகளின்றி நடைபெற… ‘ஸ்ரீராமகிருஷ்ண மடம்’ என்ன திட்டங்களை வகுத்துள்ளது?

‘வித்யா பகிர்ந்திடுங்கள் - பாதுகாத்திடுங்கள்’ என்று தலைப்பிட்டு நிரந்தர வைப்பு நிதித் திட்டம் ஒன்றினை வகுத்துள்ளோம். மடம் வெளியிட் டுள்ள நூல்களை, நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்களுக்கு விழாக் காலங்களில் பரிசளிக்கலாம். சிறுவர்களுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கலாம். இதற்காக நிதி திரட்டும் பணி தொடங்கியுள்ளது.மேலும் விவரங்களை சென்னை மடத்தின் அலுவலகத்தையோ, புத்தக விற்பனை நிலையத்தையோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். சென்னை மடத்தின் இணையதளத்திலும் (www.chennaimath.org) இதற்கான விளக்கங்களும் விவரங்களும் உள்ளன. வெளிநாடுவாழ் இந்தியர்களும் மகத் தான இத்தொண்டில் தங்களைத் தாராளமாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள ஆன்மிக ஈடுபாட்டாளர்கள் தலைக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் நிரந்தர வைப்பு நிதி அளிக்க லாம். வெளிநாடுவாழ் அன்பர்கள் தலா USD 100 நிதி அளிக்கலாம். பதிப்பகத்தின் மேம்பாட்டுக்காகவும், நிரந்தரமாக புத்தகங் களைத் தொடர்ந்து வெளியிடுவதற்காகவும், நிரந்தர வைப்பு நிதிக்கான எங்கள் இலக்கு ரூ. 6.5 கோடி.

ஒரு காலத்தில் இளைஞர்களிடையே எழுச்சியை உண்டாக்கிய விவேகானந்தரின் சிந்தனைகள், இந்தக் காலகட்டத்துக்கும் பொருத்தமானவையா?

விவேகானந்தரின் கருத்துகள் எந்த காலகட்டத்துக்கும் பொருந்துபவை. சில ஆண்டு களுக்கு முன்பாக, பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, ‘‘இந்தியாவின் தலைசிறந்த, உங் களின் மனம் கவர்ந்தவர் யார்?’’ என இளைஞர்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அப்போது ஸ்வாமி விவேகானந் தரைத்தான் இளைஞர்கள் தேர்ந்தெடுத்தார்கள் காரணம், ஸ்வாமி விவேகானந்தர் மனிதனை நேசித்தார். மனிதன் புனிதனாக வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

சாதாரண மனிதன் சாதனை மனிதனாக மாற வேண்டும் என்று உறுதியுடன் செயல்பட்டவர். விவேகானந்தரின் பிறந்த நாளைதான் ‘இளைஞர் கள் தின’மாக நமது இளைய பாரதம் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் பல லட்சம் இளைஞர்கள் மெரினாவில் கூடி, நமது பாரம்பரியத்தைக் காக்க அறப்போராட்டம் நடத்தியதை உலகமே போற்றி யது. ஸ்வாமி விவேகானந்தர் 1897-ல் மொத்தத் தமிழகத்தையும் நோக்கிக் கூறியதாவது “சென்னை இளைஞர்களே… எனது நம்பிக்கை எல்லாம் உங்களிடம்தான் உள்ளது. நீங்கள் உங்களை நம்பினால் மகத்தான இந்தியாவை நாம் படைக்க முடியும்” என்றார். விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கம் இன்றளவும் நிறைந்துள்ளது என்பது நிரூபணமாகிவிட்டதல்லவா?

ஸ்வாமி விவேகானந்தரின் சென்னை விஜயம் பற்றி..?

உலகமெங்கும் ஆன்மிக உரையாற்றிவிட்டு ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவுக்குத் திரும்பியபோது, சென்னையில் 1897-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 9 நாட்கள் அவர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஐஸ் ஹவுஸில் தங்கியிருந்தார். அதுவே இப்போது ‘விவேகானந்தர் இல்லம்’ எனப்படுகிறது. ஸ்வாமி விவேகானந்தர் மிகச் சிறந்த ஆறு சொற்பொழிவுகளை வழங்கினார். தேசத்தின் வளர்ச்சி மற்றும் தேசியத்தைப் பற்றியும் அதில் கூறியிருந்தார்.

மகாத்மா காந்தி விவேகானந்தரின் கருத்து களைப் பற்றிக் கூறும்போது ‘‘நான் விவே கானந்தரின் கருத்துகளை தீவிரமாகவும், ஆழமாகவும் படித்துள்ளேன். அவற்றைப் படித்த பிறகு எனது தேச பக்தி ஆயிரம் மடங்காக உயர்ந்தது” என்றார்.

ரவீந்திரநாத் தாகூர் “ஸ்வாமி விவேகானந்தரின் கருத்துகள் யாவும் ஆக்கபூர்வமானவை!” என வலியுறுத்தியுள்ளார். ஸ்வாமி விவேகானந்தர் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றைப் பற்றி திரும்பத் திரும்ப வலியுறுத்தி அறிவுரைகளை வழங்கினார். ஆகையால்தான் அவரைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ‘விவேகானந்த நவராத்திரி’ கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x