Last Updated : 02 Jan, 2014 12:00 AM

 

Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

களைகட்டிய கலங்கரை விளக்கம் - ஓரே நாளில் ரூ. 36, 500 வசூல்

மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை புத்தாண்டு தினத்தில் மட்டும் 4,050 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.36,500 வசூலாகியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு கடந்த மாதம் 14ம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கலங்கரை விளக்கத்தையும், அதன் கீழே அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்க தொழில்நுட்ப அருங்காட்சியகத்தையும் பார்வை யிடுவதற்கு பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு (12 வயதுக்குட்பட்டவர்கள்) ரூ.5ம், வெளிநாட்டினருக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

பொதுமக்கள் அதிக அளவில் வருவதால், கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் இருந்து பார்வையாளர்கள் நேரம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் என அதிகரிக்கப்பட்டது. புதன்கிழமை புத்தாண்டு விடுமுறை என்பதால் காலை முதலே கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதுதொடர்பாக கலங்கரை விளக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: கலங்கரை விளக்கத்தை தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர். புத்தாண்டு தினத்தன்று மொத்தம் பெரியவர்கள் 3,250 பேர், சிறியவர்கள் 800 என மொத்தம் 4,050 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ஒரே நாளில் ரூ36,500 வசூலாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x