

பராமரிக்கப்படாத, பாழடைந்த தெரு விளக்கு கம்பங்களை ஆண்டுக் கணக்கில் சென்னை மாநகராட்சி அகற்றாமல் உள்ளது. எப்போது விழுமோ என்ற பீதியுடனே அந்தக் கம்பங்களை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.
சென்னை மாநகரில் தெரு விளக்குகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் நிறுவப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. தெருக் கள், சாலைகளில் சுமார் ஆறு மீட்டர் உயரத்தில் மின்விளக்கு கம்பங்களை அமைத்துள்ளனர். முக்கிய சாலைகளில் வெள்ளை நிற எல்.இ.டி. மற்றும் சோடியம் விளக்குகளும் தெருக்களில் மஞ்சள் நிற சோடியம் விளக்குகளும் பயன் படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு வார்டிலும் 500 முதல் 1,000 மின் கம்பங்கள் வரை நடப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு, பல இடங்களில் இரும்பு மற்றும் சிமென்ட் கான்கிரீட் கலவையினாலான தெருவிளக்கு கம்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை அடிக்கடி துருப்பித்து, மின் கசிவு ஏற்படும் ஆபத்து இருந்தது.
இதனால், தற்போது புதிய வகை சோடியம் விளக்குகளை பயன்படுத்தும் வகையிலும், துருப்பிடிக்காத கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்ட துருப்பிடித்த கம்பங்களுக்கு பதிலாக, புதிய கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
புதிய கம்பங்கள் வைக்கப்படும் அதே நேரத்தில், பழைய கம்பங்களை தெருக்களில் இருந்து மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவதில்லை. புதிய கம்பங்களை அமைத்து, விளக்குகள் பொருத்திவிட்டு, பழைய கம்பங்களை அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர்.
துருப்பிடித்து, பராமரிப்பில்லாத அந்தக் கம்பங்கள், எப்போது யார் மீது விழுமோ என்ற நிலையில் உள்ளன. இதனால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே அந்த இடங்களைக் கடக்க வேண்டி உள்ளது. மாநகரில் தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, வடசென் னையில் அதிக அளவில் உள்ளன.
இதுகுறித்து, முத்தையால் பேட்டையில் வசிக்கும் பாரி என்பவர் கூறும்போது, ‘‘பயன்படுத்தாத, பாழடைந்த தெருவிளக்கு கம்பங் களை மாநகராட்சியினர் அகற்று வதில்லை. அவற்றை தனியார் நிறுவனங்களும் அரசியல் கட்சி களும் கேபிள்கள் கட்டவும் கட்-அவுட் மற்றும் பேனர்கள் கட்டவும் பயன்படுத்துகின்றன. இதை, சம்பந்தப்பட்ட பகுதியின் மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்புத் துறையினர் கண்டுகொள்வதில்லை. அதிக பாரம் தாங்காமல் பல இடங்களில் கம்பங்கள் சாய்ந்த நிலையில், பொதுமக்களை அச் சுறுத்தும்படி உள்ளன’’ என்றார்.
மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சியில் நீண்டகாலமாக ஆள் பற்றாக்குறை உள்ளது. மின் கம்பங்கள் நடுவதற்கு ஆட்களும் வாகனங்களும் போத வில்லை. எனவேதான், பழைய கம்பங்களை அகற்றவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, இந்த பழைய கம்பங்களும் அகற்றப் படும்’’ என்றார்.