கோவை யானை முகாம் மருத்துவக் கழிவுகள்: அதிர்ச்சியில் மக்கள்

கோவை யானை முகாம் மருத்துவக் கழிவுகள்: அதிர்ச்சியில் மக்கள்
Updated on
2 min read

வனங்களை காக்கவேண்டிய வனத்துறையே இப்படி மருத்துவக்கழிவுகளை வனங்களில் விட்டுச்சென்றுள்ளன. இது நியாயந்தானா? இந்தக் கேள்வியை எழுப்புவோர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் கிராம மக்கள்.

அரசு நடத்திய யானைகள் முகாம் நடந்த இருமருங்கிலும் பவானி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பகுதிகளில் காட்டுயானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டு எருமைகள் என ஏராளமான வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வருகின்றன. இங்கே மனிதர்களுடன் இரண்டறக்கலந்து பழகிய கோயில் யானைகளை கொண்டு வந்தால் வனவிலங்குகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும்.

பழகிய யானைகளுக்கு காசநோய், பாதரோகம், குடற்புழு உபாதை என பல வித உபாதைகள் உள்ளன. அவற்றுக்கு இங்கே வைத்து சிகிச்சை அளிக்கும்போது வன விலங்குகளுக்கும் அது எளிதில் பரவி அழிவுக்கு காரணமாகி விடும்.

வனத்துறைக்கு சொந்தமான பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் டாப்ஸிலிப், முதுமலை, போளுவாம்பட்டி போன்ற வனச்சரகங்களில் போஸாக்காக வசிப்பவை. அவற்றுக்கும் கோயில் யானைகளின் நோய்த்தொற்று பரவி அபாயகட்டத்திற்கு சென்றுவிடும். எனவே இங்கே இந்த முகாம்களை இங்கே நடத்தக் கூடாது என்று சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு தேக்கம்பட்டியில் கோயில் யானைகளை தங்க வைத்துவிட்டு அங்கிருந்து 2 கிமீ தள்ளி பவானி ஆற்றங்கரையின் மறுபக்கத்தில் விளாமரத்தூர் பகுதியில் வனத்துறை யானைகளுக்கான முகாமை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தனர் அதிகாரிகள்.

முகாம் முடிந்து இங்கு பங்கேற்ற 18 யானைகளில் 16 யானைகள் வாகனத்தில் ஏற்றப்பட 2 கும்கி யானைகள் மதம் பிடித்து உள்ளதால் இங்கேயே தனித்து விடப்பட்டு விட்டன. அதை வைத்துக் கொண்டு அதன் பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் படும் துன்பத்தையும் ஏற்கனவே தி- இந்து பதிவு செய்திருந்தது.

இந்தநிலையில்தான் இங்கே மருத்துவக் கழிவுகள் குறித்த புது சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

விளாமரத்தூர் வனப் பகுதியில் தங்கியிருந்த யானைகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச், மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இவை அக்கம்பக்கம் உள்ள சிறுவர்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகியுள்ளன.

மேலும், பவானி ஆற்றில் இந்த கழிவுகள் சேகரமாவதால் பில்லூர் அணையில் நீர் திறந்து விடப்படும்போதெல்லாம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதி பவானி ஆற்றோரக் கிராமங்களில் விரவிக் கிடக்கின்றன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதிவாசிகள் கூறியது:

தேக்கம்பட்டி, விளாமரத்தூர், வேப்பமரத்தூர், நெல்லித்துறை, வனபத்திரகாளியம்மன் கோயில் துவங்கி மேட்டுப்பாளை யம் தாண்டியும் கூட இந்த மருத்துவக்கழிவுகள் ஆற்றின்கரை யோரங்களில் கிடக்கிறது. அங்குள்ள கிராமங்களில் மக்கள் இந்த நீரைத்தான் குடிநீராக பயன்படுத்துகின்றனர். துணிதுவைக்க ஆற்றில் இறங்குகிறார்கள். அதில் இந்த மருத்துவக்கழிவுகள் கிடந்தால் என்னவாகும். பொதுவாக மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஊசியைவிட யானைகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசியும் மருந்தும் மிகப்பெரியது. அதை சிறுவர்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு வந்து தங்கிய யானைகளுக்கு காசநோய், பாதரோகம், குடற்புழுநீக்கம், உடலில் ஏற்பட்ட கொப்பளங்களுக்கு எல்லாம் மருத்துவம் நடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களில் அந்த கிருமிகள் இருக்காதா? இந்த மருத்துவக் கழிவுகள் இங்கே முகாம் நடந்த 5 ஏக்கருக்கு ஆங்காங்கே பரவிக்கிடக்கிறது.

இதை அள்ளிச்செல்ல ஒப்பந்ததாரர்களை முகாம் நடக்கும் நாட்களில் நியமித்திருந்தார்கள், அவர்கள் சரியாக அள்ளாமல் விட்டுச்சென்றதால் இந்த நிலை. வனத்துறையினர்தான் சுற்றுச் சூழலை காப்பாற்ற வேண்டியவர்கள். அவர்களே இப்படி இருந்தால் எப்படி?’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை தரப்பில் கேட்டபோது, சிற்சில இடங்களில் இப்படிப்பட்ட மருத்துவக் கழிவுகள் கடைசியாக அள்ளுவது விடுபட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in