திண்டுக்கல்: பெங்களூரு ஹைபிரீட் வருகையால் தக்காளி கிலோ ரூ.2: மிரட்டும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கண்ணீர்
பெங்களூரு ஹைபீரிட் தக்காளி வரத்தால் தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் திங்கள்கிழமை கிலோ ரூ.2-க்கு தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விற்பனையாகாமல் தேக்கமடையத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் தக்காளி சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஆண்டுக்கு 2,563 ஹெக்டேரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர்.
தமிழகத்தில் தக்காளிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் மிகப்பெரிய தக்காளி சந்தை செயல்படுகிறது. அதற்கு அடுத்து திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி அதிகளவு விற்பனைக்கு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து வடமாநிலங்கள், கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதியாகிறது.
பருவமழை இல்லை
கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் இந்த ஆண்டு ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,277 ஹெக்டேரில் மட்டும் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அதனால், தக்காளி சாகுபடி பரப்பு இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்துள்ளது.
பரபரப்பு குறைந்தது
மற்ற மாவட்டங்களிலும் எதிர்பார்த்த பருவமழையில்லாததால் தமிழகத்தின் மொத்த தக்காளி பரபரப்பு இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்தது. ஆனால், கர்நாடகம், ஆந்திரத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்ததால், அந்த மாநிலங்களில் இருந்து தற்போது அதிகளவு ஹைபீரிட் தக்காளி தமிழகச் சந்தைகளுக்கு வரத்தொடங்கியுள்ளன. குறிப்பாக கர்நாடகத்தில்ல் இருந்து பெங்களூரு ஹைபிரீட் தக்காளி திண்டுக்கல் மாவட்ட காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. அதனால், கடந்த ஒரு வாரமாக உள்ளூர், வெளியூர் சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் திங்கள்கிழமை 16 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. 14 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.30 விற்பனையானது. கிலோ ரூ.2 முதல் 2.50 வரை விற்பனையானது. அதனால், இந்த வறட்சியிலும் சாகுபடி செய்து உற்பத்தி செய்த தக்காளிக்கு விலை கிடைக்காமல் உள்ளூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் அன்றாட சமையலில் அவசியம் பயன்படுத்தக்கூடியவை. அதனால், ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயத்துக்கு வரவேற்பு உண்டு. ஆனால், தேவைக்கு அதிகமாக வரத்து, உற்பத்தி அதிகமாகும்போது இவற்றின் விலை கடும் வீழ்ச்சியடைகிறது. தற்போது பெங்களூரு ஹைபீரிட் தக்காளி, தமிழக சந்தைகளுக்கு வரத்தொடங்கியுள்ளன.
அதனால், உள்ளூர் தக்காளியை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தக்காளிக்கு நிலையான விலை கிடைக்க, தக்காளி மூலம் உணவுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்..
அரிதாகி வரும் நாட்டுத்தக்காளி
கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன் வரை, விவசாயிகள் நாட்டுரகத் தக்காளியை மட்டுமே பயிரிட்டனர். நாட்டுத் தக்காளியில் ஹெக்டேருக்கு 15 டன் மட்டுமே மகசூல் கிடைத்தது. ஆனால், ஹைபிரீட்டில் ஹெக்டேருக்கு 30 டன் முதல் 50 டன் வரை மகசூல் கிடைத்ததால், விவசாயிகள் கடந்த பத்து ஆண்டாக பரவலாக ஹைபிரீட் தக்காளி பயிரிடத் தொடங்கி விட்டனர். அதனால், நாட்டுத் தக்காளி அரிதாகி விட்டது.
நாட்டுத் தக்காளியில் காணப்படும் ருசி, சத்து ஆகியவை தற்போது ஹைபிரீட் தக்காளியிலும் கிடைப்பதால் பொதுமக்களும் ஹைபிரீட் தக்காளியை விரும்பி சாப்பிடத் தொடங்கி விட்டனர். நாட்டு தக்காளி விலை கிலோ 700 ரூபாய் விற்கிறது. ஹைபிரீட் தக்காளி விலை ரூ.30,000 வரை விற்கிறது. ஹைபிரீட் தக்காளி விலை அதிகம் என்றாலும், கூடுதல் மகசூல், நோய் பாதிப்பு குறைவு என்பதால் விவசாயிகள் ஹைபிரீட் சாகுபடி செய்வதிலே ஆர்வம் காட்டுவதால், நாட்டுத் தக்காளி ரகம் சந்தைகளில் அரிதாகி வருகிறது.
