Published : 05 Feb 2014 06:11 PM
Last Updated : 05 Feb 2014 06:11 PM

கோவை: சோதனை மேல் சோதனைக்கு ஒரு மாநகராட்சி சாலை!

தலைவலியும், புண்நோவும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதுபோல மழைநீர் சாக்கடை கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் கான்கிரீட் லாரி ஒன்று சரிந்த பின்பே, எச்சரிக்கை தடுப்பு மூட்டைகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் ஒப்பந்தப்பணியாளர்கள்.

கோவை உக்கடத்திலிருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் புட்டுவிக்கி சாலையில் சுமார் அரை கி.மீ தொலைவுக்கு எட்டு மாதங்களாக பாதாளச்சாக்கடை அமைக்கும் பணியும், சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கும் பணியும் நடந்து வந்தது. இதற்காக இந்த சாலையின் நடுவே முழு நீளத்திற்கு அதலபாதாளக் குழிகள் தோண்டப்பட்டன. பாதாளச்சாக்கடை பிரதான பெரிய குழாய்கள் அதில் இறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன.

அப்பாடா ஒரு வழியாய் பாதாளச்சாக்கடை அமைக்கும் பணி முடிந்துவிட்டது, இனி சாலை போட்டுவிடுவார்கள் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்று இந்த சாலையின் வடபுறம் முழுநீளத்திற்கு திரும்பவும் அதலபாதாளக் குழிகள் தோண்டப்பட்டன. பிறகுதான் தெரிந்தது, அவை மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடைகளுக்காக தோண்டப்பட்டு வருகின்றன என்பது. இது மழைநீர் வடிகால் சாக்கடைகள்தானே சீக்கிரமாக முடிந்துவிடும் என்று இப்பகுதி மக்களும் பாதசாரிகளும், இவ்வழி வாகன ஓட்டிகளும் நம்பினர். ஆனால், என்ன கொடுமை! பாதாளச்சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியைவிட படுபயங்கரமான ஆழத்தில் இந்த குழிகளைத் தோண்டிக்கொண்டே இருந்தார்களே தவிர பணிகள் மட்டும் முடிவதாக இல்லை.

சாலையின் வடகிழக்கு கோடியில் கான்கிரீட் சுவர்கள் எழுப்பி 1 மாதத்திற்கு முன்பே மூடிகள் போட்டவர்கள் என்ன காரணமோ சாலையின் தென்மேற்கு எல்லைப் பணியை ஆமை வேகத்திலேயே செய்து வந்தனர். இதனால், இந்த சாலையை பயன்படுத்துவோர் படாதபாடுபட்டனர்.

பலர் குண்டும் குழியுமான சாலையில் இரவில் மட்டுமல்லாது பகலிலும் விழுந்து கைகாலை உடைத்துக் கொண்டனர். அப்போதும் கூட நல்லவேளை இந்த அதலபாதாளக் குழிக்குள் விழுந்திருந்தால் எலும்புகள் நொறுங்கியே போயிருக்கும் என்று ஆறுதல் பட்டுக்கொண்டனர்.

அப்படியும் இந்த முழுநீள பாதாளக் குழிக்கு ஓரமாக ஏதாவது எச்சரிக்கை தடுப்புகளை ஒப்பந்ததாரர்கள் வைத்தார்களா என்றால் அதுதான் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இந்த பாதாளக்குழிக்கு தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு கான்க்ரீட் கலவை கொட்ட வந்த பெரிய லாரி இந்த பள்ளத்தின் ஓரமாக சரிந்து விழுந்து விட்டது. அதன்பிறகு அதனை குழிக்குள் இருந்து எடுக்க 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி இருக்கின்றனர் ஊழியர்கள். அதன்பிறகுதான் ஞானோதயம் வந்தவர்கள் போல் இந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் இந்த முழுநீளக் குழிகளின் ஓரமாக பச்சை நிற சிமெண்ட் சாக்குகளை மண் நிரப்பி பாதுகாப்பு எச்சரிக்கைக்காக வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இதுகுறித்து இப்பகுதிவாசிகள் கூறுகையில், இங்கே மட்டுமல்ல; கோவை மாநகரில் பாதாளச்சாக்கடை பணி முடிந்த சாலைகள் எல்லாமே இப்படித்தான் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. அந்த இடிபாட்டில் மிச்சம் சொச்சம் நன்றாக இருந்த சாலை ஓரப் பகுதிகளையும் இந்த மழை நீர் வடிகால் சாக்கடை அமைப்பு வேலைகள் நாசம் செய்துவிட்டன. இதனால் மாநகரின் பல பகுதிகள் பூகம்பம் வந்து நொறுங்கிப்போன நிலங்கள் போலவே காட்சி தருகின்றன.

சரி, சாலையைத்தான் முழுசாக தோண்டுகிறோமே, அதன் ஓரமாய் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கிறதே. அதற்கு பாதுகாப்பாக ஏதாவது சிகப்பு கொடிகள் கட்டலாம். அல்லது சிகப்பு தடுப்புக்கள் வைக்கலாம் என்று ஒப்பந்த பணிகளை எடுத்தவர்களுக்கோ, மாநகராட்சி அதிகாரிகளுக்கோ அக்கறை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

இந்த சாலை கோவைபுதூர், சுண்டக்காமுத்தூர், கவுண்டனூர், ராமசெட்டிபாளையம் போன்ற ஊர்களுக்கு செல்லும் சுருக்கமான வழி. இரவு 12 மணிவரை இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல்லாயிரக்கணக்கில் பயணிக்கிறது. அப்படிப்பட்ட சாலையை ஒரு வருடம் முன்பு கேபிள் பதிப்பதற்காக தோண்டி இருகூறாக்கினார்கள். அதற்கு பிறகு பாதாளச்சாக்கடைக்காக மொத்தத்தையும் அகழ்ந்தெடுத்தார்கள். அதுவும் மூடினபின்பு சாலையின் ஓரத்தை மழைநீர் வடிகாலுக்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள்.

ஆனால், சாலைக்கான சோதனை முடியாது. ஏனென்றால் அடுத்து, புட்டுவிக்கி புதிய மேம்பாலப் பணிக்கு டெண்டர் முடிந்து விட்டது. வெகு சீக்கிரமே அதற்கான பணிகள் ஆரம்பித்துவிடும். அந்த பணி முடிய அப்புறம் 2 வருஷமோ 5 வருஷமோ யார்கண்டது? அதுவரை எங்கபாடு திண்டாட்டம்தான் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x