கீழ்வானில் ஒரு வெளிச்சக் கீற்று

கீழ்வானில் ஒரு வெளிச்சக் கீற்று
Updated on
1 min read

அந்த விளம்பரப்படத்தைப் பார்த்து முடித்தவர்களின் நெஞ்சை மெலிதான ஏக்கம் மெல்ல நிறைக்கிறது. 3.30 நிமிடங்கள் ஓடும் அவ்விளம்பரம் இரு தேசத்து மக்களின் 66 ஆண்டு கால ஏக்கத்தை மீண்டும் கிளர்ந்தெழச் செய்திருக்கிறது.

நவம்பர் 13 ஆம் தேதி யூ டியூப்பில் வெளியிடப்பட்ட ‘கூகுள் ரீயூனியன்’ (google reunion) விளம்பரம், டிசம்பர் 3 ஆம் தேதி மாலை வரை 90 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஒரு விளம்பரத்தை ஏன் இத்தனை பேர் தேடிப்பிடித்துப் பார்த்திருக்கிறார்கள்? அப்படி அதில் என்னதான் இருக்கிறது?

டெல்லியில் வசிக்கும் பல்வேத் மேரா, தன் பேத்தி சுமனிடம் ஒரு பழைய ஒளிப்படத்தைக் காட்டு கிறார். இரு சிறுவர்கள் அதில் இருக்கின்றனர். பல்தேவ் மேரா தன் பால்ய நண்பன் யூசுஃபுடன் இருக்கும் படம்தான் அது.

பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் லாகூரில் பல்தேவும், யூசுஃபும் இணைந்து பூங்காவில் விளையாடியதையும், யூசுஃபின் குடும்ப பலகாரக்கடையில் இருவரும் சேர்ந்து ஜஜாரியா என்ற இனிப்புப் பண்டத்தைத் திருடித் தின்றதையும் பேத்தியிடம் பகிர்ந்து கொள்கிறார் பல்தேவ்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினை இரு நண்பர்களையும் வெவ்வேறு தேசத்தவர்களாக்கி விடுகிறது. தன் பால்யத்தின் நினைவுகளை பல்தேவால் செரிக்க முடிய வில்லை. மறக்க முடியாத பால்ய நண்பனை நினைத்து பெருமூச்செறிகிறார்.

பல்தேவ் சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் கூகுள் மூலம் பாகிஸ்தானில் உள்ள பலகாரக் கடையைக் கண்டுபிடித்து, யூசுஃபின் குடும்பத்தையும் தொடர்பு கொள்கிறார் சுமன். லாகூரில் இருக்கும் யூசுஃப்பை டெல்லிக்கு வரவழைத்து, தன் தாத்தாவின் பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் அந்த செல்லப் பேத்தி.

அமித் சர்மாவால் எடுக்கப்பட்ட இவ்விளம்பரம், விளம்பரம் என்பதையும் தாண்டி இரு தேசத்து மக்களின் உணர்வுகளை நாடிபிடித்துப் பார்த்திருக்கிறது.

சிரில் ராட்கிளிஃப் என்ற பிரிட்டன் வழக்கறிஞர் ஆகஸ்ட்14, 1947இல் தாறுமாறாகக் கிழித்த எல்லைக் கோடு இரு தேசத்து மக்களின் மனதில் ஆறாத வடுவை உண்டாக்கிவிட்டது அப்போது நடந்த சம்பவங்கள் வரலாற்றில் மிகப்பெரும் சோகங்களாகப் பதிவாயின. ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிரிவினைவாதம் சகோதரர்களை எதிரெதிரே பூசலுக்கு நிறுத்தியது.

இன்றைய அரசியலும், பிரிவினைவாத அரசியலைப் பயன்படுத்திக் குளிர்காய்பவர்களும் இரு தேசத்தவர்களும் எதிரிகள் என்ற பிம்பத்தைக் கட்டமைத்திருக்கின்றனர். ஆனால், அதிகார மட்டத்தைத் தாண்டி, சாதாரண மக்கள் பரஸ்பரம் அன்பு செலுத்தவே விரும்புகிறார்கள் என்பதைத்தான் இந்த விளம்பரத்தின் வெற்றி உணர்த்துகிறது.

இதனை நீங்கள் படித்து முடித்திருக்கும் போது இந்த விளம்பரத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியிருக்கக்கூடும். மேலும் பல லட்சம் பேர் பார்ப்பார்கள். வெறும் விளம்பரம் என்பதைத் தாண்டி உணர்வுப்பூர்வமான விஷயமாக இது பார்க்கப் பட்டிருப்பது ஓர் உண்மையை உணர்த்தியிருக்கிறது. கீழ்வானில் ஒரு வெளிச்சக்கீற்று தெரிகிறது; அது சூர்யோதயமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் அது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in