Last Updated : 13 Feb, 2017 09:33 AM

 

Published : 13 Feb 2017 09:33 AM
Last Updated : 13 Feb 2017 09:33 AM

சூழலைப் பொறுத்தே ஆதரவைத் தீர்மானிப்போம்!- எஸ்.திருநாவுக்கரசர்

5 கேள்விகள் 5 பதில்கள்

தேசியக் கட்சிகளின் தமிழக நிர்வாகிகளுக்கு இரு முகங்கள் உண்டு. தங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதுடன், மறைமுகமாக திமுக அல்லது அதிமுகவின் ஆதரவாளர்களாகவும் இருப்பார்கள். அதிமுக இப்போது இரண்டு பிரிவுகளாக நிற்கும் நிலையில், தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் யார் பக்கம் நிற்கிறார்?

தமிழக அரசியல் குழப்பத்துக்கான பின்னணியில் பாஜக இருக்கிறது என்று சொல்கிறீர்களே, எந்த அடிப்படையில்?

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வறட்சி நிவாரணம் கேட்டு டெல்லி சென்றபோது அவரைச் சந்தித்த மோடி, அதே கட்சியின் பொதுச் செயலாளர் கடிதத்துடன் சென்ற கேபினட் அந்தஸ்து கொண்ட துணை சபாநாயகர் தலைமையிலான 50 எம்பிக்களைப் பார்க்க மறுத்து இரு முறை திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்படி ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே பிளவு இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட அஸ்திவாரம் போட்டது பாஜகதான். பன்னீர்செல்வம் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தங்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்வுசெய்த ஒருவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டியதுதான் ஆளுநரின் கடமை. அதைச் செய்யவிடாமல், ஆளுநரைத் தடுத்ததன் மூலம், கட்சிக்குள்ளும் பிளவை மோடி ஏற்படுத்திவிட்டார். ஜனாதிபதி தேர்தலில், 50 எம்.பி.க்கள், சுமார் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு முக்கியமல்லவா? அதற்குத் தாங்கள் சொல்வதைக் கேட்பவர்களிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் கணக்கு.

ஆனால், சசிகலா திமுகவைத்தானே குற்றம்சாட்டுகிறார்?

பாஜகவை விமர்சித்து தம்பிதுரை அறிக்கை விட்டாரே, சசிகலா அனுமதிக்காமலா அதைச் செய்திருப்பார்? இப்போதுள்ள சூழலில் சசிகலா பதவியேற்க ஆளுநரின் உதவியும் மத்திய அரசின் உதவியும் தேவை. எனவே, உண்மையை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் அவர் இருக்கலாம். திமுக மீதான குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாக நான் நம்பவில்லை.

அதிமுகவில் இதுபோன்ற சூழல் முன்பொரு முறை ஏற்பட்டபோது, ஜெயலலிதா பக்கம் நின்றீர்கள்.. இப்போது?

அப்போது எனக்கு அதிமுகவில் நேரடியாகப் பங்கு இருந்தது, தலையிட்டேன். எனக்கு நியாயமாகப்பட்டதைச் செய்தேன். இப்போது நான் தமிழக காங்கிரஸ் தலைவர். இன்னொரு கட்சிக்குள் தலையிட முடியாது. யாரை பொதுச் செயலாளராக, முதல்வராக வைத்துக்கொள்ள வேண்டும், யாரை வெளியே போகச் சொல்ல வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸின் உதவி தேவைப்படும் சூழல் எழுந்தால், காங்கிரஸின் 8 உறுப்பினர்கள் யார் பக்கம் நிற்பார்கள்?

முதலில் ஆளுநர் அவரது முடிவை அறிவிக்கட்டும்.. அதற்குப் பின் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு, காங்கிரஸின் உதவி தேவை என்று கோரப்பட்டால், யாரை ஆதரிப்பது என்று கூட்டணிக் கட்சிகளுடன் கூடிப் பேசி சூழலுக்கேற்ப முடிவெடுப்போம்.

நீங்கள் போகும் போக்கைப் பார்ப்பவர்கள் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி உறுதி என்கிறார்களே?

காங்கிரஸ் கட்சி யாரைவிட்டும் விலகிச் செல்லவும் இல்லை, யாரிடமும் நெருங்கி வரவும் இல்லை. தமிழகத்தில் தன்னை வலுப் படுத்திக்கொள்ளும் முயற்சியில் மட்டுமே அது ஈடுபட்டிருக்கிறது. பன்னீர்செல்வம், சசிகலா இருவரும் எங்களுக்கு ஒன்றுதான். அரசியல் சட்டம் என்ன சொல்கிறதோ அதைச் செய்யுங்கள் என்றுதான் ஆளுநரிடம் வலியுறுத்துகிறேனே தவிர, சசிகலாவுக்கு மட்டும் பதவிப்பிரமாணம் செய்து வையுங்கள் என்று நான் சொல்லவில்லையே? ஆக, மாநில அரசு சார்ந்து பேசுவதை அதிமுக அல்லது சசிகலா சார்பு என்று பார்க்க வேண்டியதில்லை.

சூழலைப் பொறுத்தே ஆதரவைத் தீர்மானிப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x