Published : 06 Oct 2014 05:40 PM
Last Updated : 06 Oct 2014 05:40 PM

வாசகரின் பங்களிப்பைக் கொண்ட நாளிதழ் வெற்றி பெறும்: திருச்சி வாசகர் விழாவில் நீதியரசர் வெ.ராமசுப்ரமணியன் பேச்சு

'தி இந்து' தமிழ் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்

வாசகரின் பங்களிப்பைக் கொண்ட நாளிதழே சிறந்த நாளிதழாக வெற்றிபெற முடியும் என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரியைத் தொடர்ந்து திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித வளனார் கல்லூரி (செயின்ட் ஜோசப் கல்லூரி) ஜூப்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன் பேசியதாவது: வாசகருக்கும், நாளிதழுக்குமான உறவு கணவன்- மனைவி உறவு போன்று இருக்க வேண்டும். தினந்தோறும் கருத்து மோதல்கள் இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது. சமுதாயத்தில் பல்வேறு தரப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு சில செய்திகள் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால், எந்த ஒரு நாளிதழ் எல்லா வாசகர்களுக்கும் பிடித்தமான செய்திகளைத் தாங்கி வருகிறதோ அதைத்தான் தங்களின் நாளிதழாக வாசகர்கள் தாங்கிப் பிடிப்பார்கள். அந்த நாளிதழ்தான் காலத்தை தாண்டி நிற்கும். வாசகர்களின் பங்களிப்பு என்பது ஒரு இயக்கமாக மாற முடியும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன.

சகிப்புத் தன்மைக்கு பெயர்போன, சகிப்புத் தன்மையால் வெற்றிக் கொடி நாட்டிய வரலாற்றை கொண்ட நமது நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது. கருத்துச் சுதந்திரம் என்பதற்கு மாறுபட்ட எண்ணங்கள் உள்ளன. ஒரு சிலர் தங்களது கருத்துக்கு சுதந்திரம், மற்றவர் கருத்துக்கு தடை என்ற எண்ணத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் ஒரு நாளிதழை வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் கடினமான வேலைதான்.

"இன்றைய செய்தித்தாள் நாளை குப்பைத் தாள்" என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இக்கருத்தை மாற்றும் விதமாக எந்த நாளிதழ் வென்று காட்டுகிறதோ அந்த நாளிதழ்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறது.

24 மணி நேர செய்திகளை சொல்லும் காட்சி ஊடகங்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் வெறும் செய்திகளை மட்டுமே ஒரு நாளிதழ் கொண்டிருந்தால், அது மக்களிடம் எடுபடாது. பல்வேறு பிரச்சினைகளை வேறுகோணத்தில் கொண்டு சேர்க்க வந்ததுதான் நடுப்பக்க கட்டுரைகள், சிறப்புச் செய்திகள்.

1818-ம் ஆண்டில் பக்கிங்ஹாம் என்பவர் வாரம் இருமுறை கருத்து இதழைத் தொடங்கினார். அவர் சொன்னது என்னவெனில், மக்களின் அறிவைப் பெருக்க பள்ளிக் கூடங்கள் வேண்டும் என்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு மக்களுக்கு அறிவை ஊட்டும் பத்திரிகைகளுக்கும் ஆதரவு இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் அட்லாண்டிக் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பார்பரா வால்ராப்க்கு சொற்கள் மீது ஆர்வம் அதிகம். அவரிடம் சிலர் கேட்ட கேள்விகளை தனது வாசகர்களிடையே முன் வைத்தார். அதற்கு ஏராளமான கருத்துகள் வந்தன.அந்த வகையில் வாசகர்களின் பங்களிப்பையும் தாங்கிவரும் நாளிதழ் 'தி இந்து' தமிழ்.

உலகத்தில் மறைந்து போகக் கூடிய பத்து என்ற தலைப்பில் இணையதளத்தில் ஒரு பட்டியல் இருந்தது. அதில் முதலாவதாக இருந்தது செய்தித்தாள். ஆனால், 110 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் 40 கோடியே 60 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன என புள்ளிவிவரம் கூறுகிறது. படிப்பவர்களின் எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு செய்தித்தாள் வாங்குவோரது எண்ணிக்கை 8.56 சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது செய்தித்தாள்களுக்கு சிறப்பான இடம் இருப்பதை உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு செய்தியைப் பார்க்கிற கோணத்தில்தான் அதன் பரிமாணத்தை மாற்ற முடியும். அப்படி மாற்றும்போதுதான் அது வாசகர்களுக்கு சூடாக, சுவையாக, பயனுள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பத்திரிகை வெற்றி பெறும். 'தி இந்து' தமிழ் நாளிதழ் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார் அவர்.

விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ந.மணிமேகலை, திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ், சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வர் கே.துளசிதாசன், நகைச்சுவை பேச்சாளர் பாஸ்கி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய 'தி இந்து' தமிழ் ஆசிரியர் கே.அசோகன் பேசியபோது, "ஏராளமான நாளிதழ்கள் வந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் 135 ஆண்டுகள் பழைமையும், பெருமையையும் வாய்ந்த இந்து குழுமம், கடந்த ஆண்டு தமிழ் நாளிதழை தொடங்கியது. அப்போதே முடிவு செய்தோம், நாம் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று. எனவேதான் ஒவ்வொரு செய்தியையும் பல்வேறு கோணங்களில் சிந்தித்து, அதில் நிபுணத்துவம் பெற்றவர்களின் கருத்துகளையும் இணைத்து வாசகர்களுக்கு அளித்து வருகிறோம்.

மேலும், 'உங்கள் குரல்' என்ற வாசகர்கள் தொலைபேசி வாயிலாக தங்களது கருத்துகளை தெரிவிக்கும் புதிய முறையையும் 'தி இந்து' தமிழ் செயல்படுத்தி வருகிறது. இது வாசகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. நாளிதழில் வரும் சிறு பிழைகளைக்கூட இதன் மூலம் வாசகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதன் மூலம் நாளிதழை நாள்தோறும் செழுமையூட்டி வருகிறோம்.

வாசகர்களின் பங்களிப்போடு 'தி இந்து' தமிழ் நாளிதழ் ஓராண்டை சிறப்பாகக் கடந்துள்ளது. 'தி இந்து' தமிழ் நாளிதழ்- வாசகர்கள் இடையேயான பிணைப்பு மென்மேலும் வலுப்பெற்று வருகிறது. இதன் மூலம் மேலும் சிறப்பான செய்திகளையும், விஷயங்களையும் வாசகர்களுக்கு தரமுடியும் என்பதில் நம்பிக்கையுடன் செயலாற்றி வருகிறோம்" என்றார்.

விழாவை, இந்து குழுமத்தின் முதுநிலை பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, 'தி இந்து' தமிழ் திருச்சி பதிப்பு விளம்பர அலுவலர் கே.விஜயன் நன்றி கூறினார்.

முதல் வாசகர்களுக்கு கவுரவம்

விழா அரங்குக்கு முதல் வாசகர்களாக வந்த திருச்சியைச் சேர்ந்த டி.பி.மனோகரன், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் பகுதியைச் சேர்ந்த மு.மாரிமுத்து, திருச்சி காட்டூர் கே.சரண்யா நிகேஷ்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். வாசகர்கள் சிலர் தாங்கள் எழுதிய கவிதைகளை விழா மேடையில் வாசித்தனர்.

லலிதா ஜூவல்லரி, ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், கே.ஆர்- ஜிஎப்ஐ (எல்பிஜி கிட்) மற்றும் திருச்சி சங்கம் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் விழாவை இணைந்து நடத்தின.

விழா அரங்கில் 'தி இந்து' குழுமத்தின் சிறப்பு வெளியீடுகளான திருப்பதி பிரம்மோற்சவம் மலர் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

பலத்த வரவேற்பை பெற்ற 'உங்கள் குரல்'

முன்னதாக வரவேற்புரையாற்றிய 'தி இந்து' தமிழ் ஆசிரியர் கே.அசோகன் பேசியபோது, "ஏராளமான நாளிதழ்கள் வந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் 135 ஆண்டுகள் பழைமையும், பெருமையையும் வாய்ந்த இந்து குழுமம், கடந்த ஆண்டு தமிழ் நாளிதழை தொடங்கியது. அப்போதே முடிவு செய்தோம், நாம் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று. எனவேதான் ஒவ்வொரு செய்தியையும் பல்வேறு கோணங்களில் சிந்தித்து, அதில் நிபுணத்துவம் பெற்றவர்களின் கருத்துகளையும் இணைத்து வாசகர்களுக்கு அளித்து வருகிறோம்.

மேலும், 'உங்கள் குரல்' என்ற வாசகர்கள் தொலைபேசி வாயிலாக தங்களது கருத்துகளை தெரிவிக்கும் புதிய முறையையும் 'தி இந்து' தமிழ் செயல்படுத்தி வருகிறது. இது வாசகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. நாளிதழில் வரும் சிறு பிழைகளைக்கூட இதன் மூலம் வாசகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதன் மூலம் நாளிதழை நாள்தோறும் செழுமையூட்டி வருகிறோம்.

வாசகர்களின் பங்களிப்போடு 'தி இந்து' தமிழ் நாளிதழ் ஓராண்டை சிறப்பாகக் கடந்துள்ளது. 'தி இந்து' தமிழ் நாளிதழ்- வாசகர்கள் இடையேயான பிணைப்பு மென்மேலும் வலுப்பெற்று வருகிறது. இதன் மூலம் மேலும் சிறப்பான செய்திகளையும், விஷயங்களையும் வாசகர்களுக்கு தரமுடியும் என்பதில் நம்பிக்கையுடன் செயலாற்றி வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x