

தமிழகத்தில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், நாளை மாநிலம் முழுவதும் போட்டிகள் துவங்குகின்றன. இதனால் கிராமப்புற விளையாட்டு வீரர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பைக்கா (பஞ்சாயத்து யுவ கிரிடா அபியான்) விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில் கிராமங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கான நிதியை, அந்தந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும். மாநில அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணயம் மூலம், மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு நிதி வழங்கப்பட்டு, ஆண்டுதோளும் பிப்ரவரி மாதத்திற்குள் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முடிக்கப்படும்.
ஆனால், கடந்த ஆண்டு பைக்கா விளையாட்டுப் போட்டிக்கான நிதியை, தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதிக்கான வரவு, செலவு கணக்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையாக வழங்க வேண்டும். அந்த விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்க காலதாமதமானதால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘தி இந்து’ நாளிதழ் செய்தி
இதுகுறித்து 'தி இந்து’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக பைக்கா விளையாட்டுப் போட்டிக்கான கடந்த ஆண்டு நிதியை, தற்போது மத்திய அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, பைக்கா விளையாட்டுப் போட்டியில் இதுவரை பிற மாநிலங்களில் நடத்தப்படாத கூடைப்பந்து, கால்பந்து, இறகுப் பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகள் இம்மாதம் நடத்தப்பட உள்ளன. இது கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு விளையாட்டுகள்
இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் கூறுகையில், பைக்கா விளையாட்டுப் போட்டிக்கான நிதியை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளதால், வரும் 23, 24-ம் தேதிகளில் ஊராட்சி ஒன்றிய அளவில் கூடைப்பந்து, கால்பந்து மற்றும் இறகுப் பந்து அல்லது டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
கால்பந்து விளையாட்டில் மட்டும் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மற்ற போட்டிகளில் 16 வயதுக்கு உள்பட்டோர் பங்கேற்கலாம். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வரும் 25, 26-ம் தேதிகளில் மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படும். தமிழகம் முழுவதும் மேற்குறிப்பிட்ட தேதியில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
பிற மாநிலங்களில் தடகளம் மற்றும் சில குழு விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட நான்கு போட்டிகள் மட்டும் நடத்தப்படவில்லை. அதனால், இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. நிதி ஒதுக்கீடு தாமதம் காரணமாக பிற போட்டிகள் நடத்தப்படவில்லை என்றனர்.