Last Updated : 20 Feb, 2017 09:39 AM

 

Published : 20 Feb 2017 09:39 AM
Last Updated : 20 Feb 2017 09:39 AM

மறு தேர்தல்தான் மக்களின் விருப்பம்!- நந்தினி

5 கேள்விகள் 5 பதில்கள்



தை எழுச்சிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, 2012 தைப் பொங்கல் அன்று மதுவிலக்கு கோரி 20 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து மதுரை வைகை ஆற்றில் பொங்கல் வைத்தார்கள். இதில் ஒருவர், முதலாண்டு சட்ட மாணவியாக இருந்த நந்தினி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளன்று, மதுரை தமுக்கம் மைதானத்தில் காவல் துறை தடியடிக்குப் பிறகும் களத்தில் நின்றதால், காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர்களிலும் நந்தினி உண்டு. இளையோர் அரசியலில் நம்பிக்கை தரும் முகங்களில் ஒன்றான அவருடன் ஒரு பேட்டி.

இன்றைய அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?

மகிழ்ச்சியாக இல்லை. மது விலக்குக்காகப் பிரச்சாரம் செய்ததுபோலவே, மது ஆலைகளின் உரிமையாளர் சசிகலா முதல்வராகக் கூடாது என்று நானே பிரச்சாரம் செய்தேன். பன்னீர்செல்வம், வெளியே வந்து சசிகலாவுக்கு எதிராக நின்றபோது அவரை நான் ஆதரிக்கவில்லை. இது அதிகாரத்துக்கான சண்டை என்பதில் தெளிவாக இருந்தேன். ஜெயலலிதாவும் சரி, சசிகலாவும் சரி.. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்கள். “குற்றவாளியின் ஆட்சியை நடத்துவேன்” என்று சொல்பவரையும், குற்றவாளியே இயக்குகிற ஆட்சியையும் எப்படி ஆதரிக்க முடியும். மறு தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் மக்கள் கருத்தாக இருக்கிறது.

இளைஞர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது போன்ற தோற்றம் உள்ளதே?

சசிகலா மேல் உள்ள வெறுப்பு, பன்னீர்செல்வம் மீதான ஈர்ப்பாக வெளிப்பட்டது உண்மைதான். ஆனால், பன்னீர்செல்வத்தின் பின்னணியில் இருந்தவர் யார் என்ற விவரம் விரைவிலேயே இளைஞர்களுக்குப் புரிந்துவிட்டது. ‘மெரினாவிலும் தமுக்கத்திலும் காவல் துறையை ஏவிவிட்டு, நம்மைத் தாக்கியவர்தானே பன்னீர்செல்வம்’ என்ற புரிதலும், ‘அதிமுக அரசின் ஊழல்களில் அவருக்கும் பங்கு உண்டு’ என்ற தெளிவும் இளைஞர்களுக்கு இருக்கிறது.

போராடிய இளைஞர்களுக்குத் தலைமை இல்லாமல்போனது தவறென்று உணர்கிறீர்களா?

வெறுமனே ஒரு வார கால அவகாசத்துக்குள் இளைஞர்கள் எப்படித் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். தற்போதைய இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வு இருப்பதால், நிச்சயமாக அவர்களிலிருந்து நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.

இன்றைய அரசியலில், இளைஞர்களின் பங்கு என்னவாக இருக்கிறது?

அரசியல் கட்சிகளில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருக்கும் இளைஞர்களை எல்லாம் மாற்றத்துக்கான இளைஞர்களாகக் கருதிவிட முடியாது. அரசு வேலைவாய்ப்பு, குடும்ப நிர்ப்பந்தம் போன்ற காரணங்களால்தான் பெரும்பாலானோர் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தங்கள் போக்குக்கு அரசியல் கட்சிகள் இந்த இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளுமே தவிர, இளைஞர்களின் எண்ணத்துக்கும் கருத்துக்கும் அக்கட்சிகள் மதிப்பளிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தேர்தலில் போட்டியிடுவீர்களா?

நான் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் போட்டியிடுவார்கள். கட்சி சார்பில் வாக்கு கேட்கும் நபர்கள் எல்லாம், எம்எல்ஏ ஆன பிறகும் கட்சி ஆட்களாகவே இருக்கிறார்கள், மக்கள் பிரதிநிதிகளாக இல்லை என்பதை இந்த ஒருவார காலத்தில் இளைஞர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆர்வமுள்ள இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தனி அணியாக நிச்சயம் களமிறங்குவோம். திடீரென நான் பொதுவாழ்வுக்குள் வந்துவிடவில்லை. என் தந்தை ஆனந்தன் எனக்கு அரசியல் கற்றுத் தந்தார். அதைப் போல தமிழகம் முழுவதும் இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x