Last Updated : 30 Jun, 2017 09:32 AM

 

Published : 30 Jun 2017 09:32 AM
Last Updated : 30 Jun 2017 09:32 AM

சோதிச்சதெல்லாம் போதும் பெருமாளே..!- வதைக்கும் வறுமையில் டி.எம்.எஸ்-ஸின் தம்பி

வசியக் குரலோன் டி.எம்.சௌந்தரராஜனின் பக்திப்பாடல்கள் என்றால், அவரது தம்பி டி.எம்.கிருஷ்ணமூர்த்திக்கு உயிர். ஆனால் இப்போது, அதையெல்லாம் சிலா கித்துக் கேட்கும் மனநிலையில் இல்லை கிருஷ்ணமூர்த்தி - காரணம் வதைத்தெடுக்கும் வறுமை!

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் வசித்த செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த ‘தொகுளுவா’ மீனாட்சி அய்யங்கார் - வேங்கடம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள். மூத்தவர் சீனிவாச அய்யங்கார், அடுத்தது டி.எம்.சௌந்தரராஜன் அய்யங்கார், கடைக் குட்டி டி.எம்.கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார். அண்ணன் சௌந்தரராஜனுக்கு நாவில் சரஸ் வதி என்றால், தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு விரல்களில் கலைவாணி. டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டி.எம்.தியாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன், நாதஸ்வர சகோதரர் களான என்.பி.என்.சேதுராமன் - பொன்னுச்சாமி ஆகியோருக்குப் பக்க வாத்தியமாக தவில் வாசித்தவர் கிருஷ்ணமூர்த்தி.

முன்பு, மதுரை வானொலியில் நிலையக் கலைஞராகப் பணியாற்றிய போததே கோயில் களுக்கு வாசிப்பதில் தான் இவருக்குப் பிரியம். 2009-ல் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கிற்கு தவில் வாசித்த முக்கியமான கலைஞர்களில் இவரும் ஒருவர். 2003-ல் இவருக்கு கலை மாமணி விருது கொடுத்து கவுரவித்தது தமிழக அரசு.

மூத்த அண்ணனைத் தொடர்ந்து, டி.எம்.சௌந்தர ராஜனும் 2013-ல் இறந்துவிட, ‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் விடுதலை தரமாட்டேங்கிற..?’ என்று புலம்பிக்கொண்டிருக் கிறார் 92 வயதாகும் டி.எம்.கிருஷ்ணமூர்த்தி. மதுரை யானைமலை நரசிங்கத்தில் சிதில மடைந்த ஒரு ஓட்டு வீடு. சுண்ணாம்புகூட அடிக்கப்படாத இந்த வீட்டில் தான் 20 ஆண்டு களாக இவர் குடியிருக்கிறார்.

மொத்தக் கையிருப்பு

அந்த வீட்டிற்கு கழிவறையோ, குடிநீர் இணைப்போ கிடையாது. சமையல் அறை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம் என்பதால், பிரதான அறையைத்தான் சமைப்பது முதல் சகலத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, ஒரு கியாஸ் அடுப்பு, பழைய மின்விசிறி, இரும்புக்கட்டில், இற்றுப்போன பீரோ, துணி மூட்டைகள், கொஞ் சம் பாத்திரங்கள் இவை தான் இப்போது கிருஷ்ணமூர்த்தியின் மொத்தக் கையிருப்பு.

ஒல்லியான தேகம், நெற்றியில் பளிச்சிடும் நாமம், வெள்ளியாய் நரைத்துப்போன தலையில் ஒரு குடுமி. 92 வயதிலும் கிருஷ்ணமூர்த்தியின் குரல் கணீரென்கிறது. பார்வையும் மோச மில்லை. கூன் விழுந்திருந்தாலும் வேகமாக நடக்கிறார். ஆனால், காது அவ்வளவாய் கேட்க வில்லை. பத்திரிகையில் இருந்து வந்திருக்கி றோம் என்பதை அவர் மனைவி வர்த்தினி மூல மாகச் சொல்லிப் புரியவைப்பதற்கே 10 நிமிடம் ஆனது. ஆனால், விஷயம் தெரிந்த தும் நமக்காகவே காத்திருந்தவர் போல கொட்டித்தீர்த்து விட்டார் மனிதர்.

சோதனை போதும் பெருமாளே

“தம்பி, 80 வயசு வரைக்கும் வருமானத் துக்குப் பிரச்சினையில்ல. கோயில் நிகழ்ச்சி, வாய்ப்பாட்டு, மிருதங்கம் கத்துக்குடுக்கிற துன்னு பிழைப்பு ஓடிச்சி. அப்புறம் முடியல. கொஞ்ச நேரம் வாசிச்சாலே மூச்சு வாங்குது. வீட்டுக்காரம்மாவுக்கு மூட்டுவலி. அவங்களால எந்த வேலையும் பார்க்க முடியாது. கடைக்குப் போறதுல இருந்து, கிணத்துல தண்ணி இரைக்கிறது வரைக்கும் எல்லாத்தையும் நான்தான் பார்க்கணும்.

எங்களுக்கு 2 பையனும், ஒரு பொண் ணும் இருக்காங்க. அவங்களே தனிக் குடித் தனத்துல கஷ்டப்படுறதால எங்களைக் கண்டுக்கிடுறதில்லை. வீட்ல பாத்ரூம் இல்லாததால, வெளித்திண்ணைய துணியால மறைச்சிக்கட்டி கழிப்பறையா பயன்படுத்து றோம். தலைவாசல் நாற்றத்தைச் சகிச்சுக் கிட்டு, அடுத்த அறையிலேயே சாப்பிடுறதும், தூங்குறதுமா வாழ்க்கை ஓடுது. ‘சோதிச்ச தெல்லாம் போதும் பெருமாளே, என்னை அழைச் சிட்டுப் போயிடு'ன்னு தினமும் சேவிக்கி றேன், அந்தப் பெருமாள் மனம் இறங்க மாட்டேங்குறானே’’ என்றபோது கிருஷ்ண மூர்த்திக்கு கண்ணீர் திரண்டு உருண்டது.

திடீர்னு எப்படி இவ்வளவு வறுமை? என்று கேட்டோம். ‘‘திடீர் வறுமை எல்லாம் இல்ல. ஆரம்பத்துல இருந்தே பெரிய வசதியெல்லாம் கெடையாது. அப்பா மீனாட்சி அய்யங்கார், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அர்ச்சகராக வேலை பார்த்தாரு. நாங்களும் அவரோட சேர்ந்து கோயில் கைங்கர்யம் பண்ணினோம். அண்ணன் சௌந்தரராஜன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் இசையும், நான் சி.எஸ்.முருகபூபதிக்கிட்ட மிருதங்கமும் கத்துக்கிட்டோம்.

எங்களுக்கு கோயில் நிகழ்ச்சிகள்ல பஜனை பாடுறதுதான் தொழில். வெற்றிலை, பாக்கு, பழத்தோட அஞ்சு பத்து கொடுப்பாங்க. அதை வெச்சித்தான் குடும்பப் பிழைப்பு ஓடிச்சி. நண்பர்கள் வற்புறுத்தியதால அண்ணன், 1950-களிலேயே சினிமா வாய்ப்புத் தேடிப் போயிட்டாரு. நான் கடைசி வரைக்கும் கோயில், குளம்னே இருந்துட்டேன். முதல் படம் பண்ணுறதுக்கு முன்னாடியே (1946) அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சி. எங்கே தம்பிக்கு பணம், காசை கொடுத்துருவாரோன்னு அண்ணன்கிட்ட எங்கள நெருங்கவிடாமப் பார்த்துக்கிட்டாங்க அண்ணி. கடைசி காலத்துல அண்ணனே வறுமையில வாடுனார்னா, எங்களை எல்லாம் கேட்கவா வேணும்?’’ வருத்தத்துடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

ஒருத்தர் விழுந்தாலும்..

‘‘கொஞ்சம் வசதியோட இருந்தப்ப முருகனோட அறுபடை வீடுகளிலும் இருபது பேருக்கு அன்னதானம் பண்ணுனோம். அந்தப் புண்ணியமோ என்னவோ இப்ப வரைக்கும் சோத்துக்குப் பிரச்சினையில்ல. கலை பண்பாட்டுத்துறையில் இருந்து, மூத்த கலைஞருக்கான உதவித்தொகையா இவருக்கு மாசம் 1,500 ரூபா வருது. ரேஷன் அரிசி, பருப்பு இருக்கு. யாராச்சும் பார்க்க வந்தா பத்து, நூறு குடுப்பாங்க. அப்படியே பிழைப்பு ஓடுது. ரெண்டு கிழமும் ஒருத்தர் உசுர இன்னொருத்தர் தாங்கிப் பிடிச்சிண்டு இருக்கோம். ஒருத்தர் விழுந்தாலும், இன்னொருத்தரும் சேர்ந்து போயிட வேண்டியதுதான்’’ என்றபோது வர்த் தினி கண்களிலும் ஆற்றாமையின் கண்ணீர்.

‘சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்.. ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கே..’ என்றோ சினிமாவுக்காக டி.எம்.எஸ். பாடிய இந்த பாடல் வரிகள் இன்று, அவரது தம்பிக்கே நிஜவாழ்க்கையின் நிதர்சனமாகிப் போனது காலம் செய்த கோலம் தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x