

அமெரிக்காவின் நியூயார்க் நகர குடியேற்றத் துறை தலைவராக இந்திய பெண் வழக்கறிஞர் நிஷா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி சுமார் 5 லட்சத்து 35 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா, தெற்காசியா, கிழக்கு ஆசியா, கரீபியன், தென்அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் நியூயார்க்கில் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். எனினும் நியூயார்க் நகரின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதை கருத்திற் கொண்டு சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியை மேற்கொள் வதற்காகவே இந்திய பெண் வழக்கறிஞர் நிஷா அகர் வாலை நியூயார்க் நகர மேயர் பில் டே பிளாசியோ தேர்ந் தெடுத்துள்ளார்.
அண்மையில் நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய மேயர் பில் டே பிளாசியோ, சமூக நீதிப் போராளியான நிஷா அகர் வாலின் தாத்தா இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார், மகாத்மா காந்தியின் பல்வேறு போராட்டங்களில் அவர் பங்கேற் றுள்ளார். தனது தாத்தாவின் கதைகளைக் கேட்டு நிஷாவும் ஒரு சமூக நீதிப் போராளியாக உருவெடுத்துள்ளார் என்றார்.
விழாவில் நிஷா அகர்வால் பேசியபோது, எனது தாத்தா மகாத்மா காந்தியின் போராட்டத்தில் சுதந்திர வேட்கையோடு பங்கேற்றார். அவரது வழியையே நானும் பின்பற்றுகிறேன். எனது குடும்பமும் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து நியூயார்க்கில் குடியேறியது என்பதால் குடிபெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்றார்.