

பகுதி நேர வகுப்புகளுக்கே பட்டி யல் போட்டு பயிற்சிக் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த நாளில், ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்க ளுக்கு இலவசமாக தடகள பயிற்சிகளை அளித்து, தேசிய சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ‘கவி நாடு ஸ்போர்ட்ஸ் கிளப்’.
புதுக்கோட்டைக்கு 5 கி.மீ தொலை வில் உள்ள கட்டியாவயலில் செயல் படுகிறது ’கவிநாடு ஸ்போர்ட்ஸ் கிளப்’ இங்கே முதல்கட்ட தடகள பயிற்சிகளை எடுத்துக் கொண்ட பலர் தற்போது, வருமான வரித்துறை, காவல்துறை, ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் விளையாட்டு வீரர்களுக் கான கோட்டாவில் பணியில் சேர்ந் திருக்கிறார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று பாலின சர்ச்சையால் பதக்கத்தை இழந்த புதுக்கோட்டை சாந்தி இங்குதான் அடிப்படை பயிற்சி பெற்றவர். தெற்காசியப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் வென்று திருச்சியில் ரயில்வே துறையில் பணிபுரியும் சூர்யா, தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி, வெண்கலம் என 2 பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர் லட்சுமணன் ஆகியோரும் இங்கு பயிற்சி பெற்றவர்களே. இவர்களைப் போல் இன்னும் பல தேசிய சாதனை யாளர்களை இந்த ’கிளப்’ உருவாக்கி யுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த கிளப்பை நடத்தி வரும் லோகநாதன், ஒரு முன்னாள் தேசிய தடகள வீரர். ஓய்வுபெற்ற வருவாய்த்துறை ஊழிய ரான இவர், ‘‘எனக்கு அரசு வேலை கிடைக்கவும், எனது குடும்பம் உயர்ந்த நிலைக்கு வரவும் காரணமாக இருந்தது விளையாட்டு. அந்த விளையாட்டுக்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக சிறந்த விளையாட்டு வீரர்களை உரு வாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.’’ என்கிறார்.
2006-ல் இந்த கிளப் தொடங்கிய போது 7 பேர் மட்டுமே பயிற்சிக்கு வந்தனர். இப்போது சுமார் 75 பேர் வரை பயிற்சி எடுக்கின்றனர். கிராமப்புற இளைஞர்களை கைதூக்கிவிட வேண் டும் என்பதில் கருத்தாய் இருக்கும் இவர், பயிற்சிக்காக எவ்வித கட்ட ணமும் வசூலிப்பது இல்லை. பயிற்சி மையத்துக்கு தேவையான நிதி உதவியை ’கிளப்’பின் தலைவர் சேகரன் தந்துவிடுவதால் உற்சாகம் குறையாமல் களத்தில் நிற்கிறார் லோகநாதன்.
‘‘கிராமப்புற இளைஞர்களிடம் விளை யாட்டு ஆர்வமும், நாட்டுக்காக சாதிக்க வேண்டும் எனும் வெறியும் இருக்கிறது. அவர்களை அடையாளம் கண்டு முறையாக பயிற்சியளித்தால் நமது நாடு மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற முடியும். அதன் ஒரு தொடக்கப்புள்ளியாக நாங்கள் எங்களால் ஆனதை செய்து வருகி றோம்.’’ என்கிறார் லோகநாதன். 3 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் என அதிக தொலைவு ஓட்டப் போட்டிகளில் மகாராஷ்டிரா, உத்தரா கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது, ‘கவிநாடு ஸ்போர்ட்ஸ் கிளப்’பில் பயிற்சி பெற்ற வீரர்களும் இந்தப் பிரிவுகளில் முதலி டம் பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இலவச பயிற்சி மாத்திரமல்லாது பால், முட்டை, பயறு வகைகள், ரொட்டி, பழங்கள் உள்ளிட்டவையும் இங்கு பயிற்சி எடுக்கும் வீரர்களுக்கு இலவச மாகவே வழங்கப்படுவது இன்னுமொரு சிறப்பு. விளையாட்டு வீரர்களுக்கு நல்லொழுக்கமும் முக்கியம் என்ப தால் தினமும் இங்கே அரை மணி நேரத்துக்கு நீதிபோதனை மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புக் களையும் நடத்துகிறார்கள்.
வறுமையின் காரணமாக படிப்பை தொடர இயலாத தடகள வீரர்கள் பலரை தனது வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார் லோகநாதன். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் தடகள வீராங்கனை சூர்யா இவரது சொந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.