

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள (எஸ்இஇஸட்) நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் தொடர்பான அறிவிக்கையை குழப்பமின்றி வெளியிட வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பையில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்விதம் விற்பனை செய்வதற்கு 4 சதவீத சிறப்பு கூடுதல் வரியை அந்நிறுவனம் செலுத்தவில்லை. இதற்குக் காரணம் அரசு வெளியிட்ட அறிவிக்கையில் இருந்த விதிமுறை குழப்பம்தான் என வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உற்பத்தி வரி மற்றும் சுங்கத்துறை தொடர்பாக மத்திய வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில் நிலவிய குழப்பமே காரணம் என்று வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உரிய விதிமுறைகளை வகுக்குமாறு நிதி அமைச்சகத்தை வர்த்தக அமைச்சகம் ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது. புதிய மும்பை பகுதியில் பான்வெல் எனுமிடத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள அர்ஷியா தாராள வர்த்தக கிடங்கு நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான விதிமுறையின் கீழ் வருகிறது. இதனால் அரசுக்கு வர வேண்டிய ரூ. 200 கோடி வரி வருமானத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்தனர்.
கட்டமமைப்பு வசதிகளை செய்து தரும் பணியில் அர்ஷியா ஈடுபட்டுள்ளது. நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லையென்றும், தங்களது வாடிக்கையாளர்கள் எவ்வித தவறும் செய்யவில்லையென்றும் நிறுவனத்தின் தலைவர் அஜய் மிட்டல் தெரிவித்தார்.
வர்த்தகம் தொடர்பான கட்டமைப்பு வசதிகளை செய்வது, ஏற்றுமதி, இறக்குமதிக்குத் தேவையான சரக்குப் போக்குவரத்து சேவைகளை அளிப்பது ஆகியவற்றோடு சரக்குகளை எவ்வித கட்டுப்பாடும் இன்றி எடுத்துச் செல்வது ஆகியன தாராள பொருளாதார மண்டலங்களினுள் செயல்படும் நிறுவனங்களுக்காக அளிக்கப்பட்ட விதிமுறையாகும்.
இந்த விதிமுறை இன்னமும் செயல்படுத்தப்படாத நிலையில் இதில் பல இடங்களில் ஓட்டைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக முன்னரே கூறப்பட்டது. இது தவிர, ஏற்றுமதி மண்டலத்தில் செயல்படும் சில நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் 4 சதவீத சிறப்பு கூடுதல் வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படுபவையாகும்.
இந்த சிறப்பு கூடுதல் வரி (எஸ்ஏடி) 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பானது இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டது. அதாவது உள்நாட்டில் தயாராகும் பொருள்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு கொண்டு வரப்பட்டது. பொருள்களின் மதிப்பில் 4 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். இது தவிர சுங்க வரியையும் செலுத்த வேண்டும்.
2003-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தயாராகும் பொருள்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டால், அதற்காக 4 சதவீதம் கூடுதல் வரியை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இந்த முறையில் வரி செலுத்துவதில் 2011-ம் ஆண்டு வரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் நிதியமைச்சகம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அங்கிருந்து வெளியேறினால் இதற்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை யடுத்தே நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தாமல் தப்பிப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.