

பள்ளிப்பருவத்தில் புதுப் புத்தகத்தை தந்தை வாங்கித்தரும்போது அதை வாங்கி நுகர்ந்து பார்த்து புத்தகப் பைக்குள் திணிக்கும் சுகத்தை எண்ணிப்பார்ப்பது ஒரு ஆனந்த அனுபவம். அதுவே பழைய புத்தகங்கள் என்றால் அதன் பழுப்பேறின தாள்களும், ஊரும் கரப்பான்களும் ஒரு மாதிரியான சூழலை ஏற்படுத்தும்.
நம்மை விட்டு பிரிந்தவர்களின் கையெழுத்துடன் கூடிய, பழைய ஆவணங்கள் ஏதாவது கிடைத்தால் மனம் எப்படி லேசாகி நெகிழ்ந்து விம்முகிறது? அந்த விம்மலின் தும்மலுடன் இருப்பவைதான் பழைய புத்தக அங்காடிகள்.
கோவை உக்கடம் பஸ் நிலையத்திற்கு இடதுபுறம் இருக்கும் பழைய புத்தகக்கடைக்குள் நுழைந்து விட்டால், புத்தம் புது வாசம் கிடைக்கிறது. மொத்தம் 31 கடைகள். ஒவ்வொரு கடைகளிலும் 10,000க்கும் குறையாத எண்ணிக்கையில் புத்தகங்கள். யு.கே.ஜி முதல் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு, கணினி, ஐ.ஏ.எஸ்., குரூப்-1 முதல் குரூப்-4 வரை எந்த பாடத்திட்ட புத்தகங்களானாலும் இங்கே சரளமாக புத்தம் புதிதாய் கிடைக்கிறது.
முப்பது வருடங்களுக்கு முன்பு, கோவை டவுன்ஹால் கோட்டை ஈஸ்வரன் கோயில் சாலையோரங்களில் 50க்கும் மேற்பட்ட பழைய புத்தகக் கடைகள் விரிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் எங்கும் கிடைக்காத பழைய புத்தகங்கள் இங்கே கிடைக்கும். கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் இங்கே இருந்த புத்தகத் புதையலை வாங்கிச்சென்று படித்துத்தான் எழுத்தாளனாக மாறியதாக சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட புத்தகக்கடைகளை மாநகராட்சி அகற்ற முற்பட்டபோது பலர் சிபாரிசு செய்ததன் பேரில் உருவானதுதான் இந்த உக்கடம் பழைய புத்தகக் கடைகள். அது இப்போது புத்தம் புது புத்தகக் கடைகளை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புத்தகத் தேடல்களுக்கான இடமாக மாறியிருக்கிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் பழைய புத்தகக் கடைகளுக்கு மட்டும் இருக்காத பின்னே? எப்படி நடந்தது இந்த வளர்ச்சி?
20 ஆண்டு
புத்தக விற்பனையாளர் ஹபீப் ரகுமான் கூறியதாவது:
இங்கே புத்தகக்கடைகள் மாற்றப்பட்டு 20 வருஷமாச்சு. கோவையில், சாய்பாபா காலனி, ராஜவீதி, பீளமேடு, காந்திபுரம், கோட்டை ஈஸ்வரன் கோயில் என அனைத்து இடங்களிலும் சேர்த்து குறைந்தது 100 கடைகள் இருக்கும். இங்கே உள்ள கடைக்காரர்கள் மட்டும் இணைந்து, பழைய புத்தகக் கடைகள் சங்கம் என்று ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
தொடக்க காலத்தில் கதை, மருத்துவ புத்தகங்களுடன் பள்ளி, கல்லூரிகளுக்கான புத்தகங்களை விற்றோம். அப்போது, சில பட்டப்படிப்புகளே இருந்தன. இப்போது அப்படியில்லை. ஏகப்பட்ட படிப்புகள் வந்துவிட்டன. இத்துடன், பல தேர்வுகளுக்கு வழிகாட்டிப் புத்தகங்கள் வந்துவிட்டன. எல்லாமே கடுமையான விலை. ஏழை எளிய மாணவர்கள் எப்படி எல்லாத்தையும் வாங்கிப் படிக்க முடியும். அதனால், புதுப் புத்தகங்களையே வாங்கி, 20 சதவீதம் வரை கழிவு கொடுக்க ஆரம்பித்தோம்.
அந்த புத்தகத்தை படித்து விட்டுக் கொண்டு வந்து தந்தால், 40 சதவீத தொகை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். அந்த புத்தகத்தை அடுத்த மாணவர் வந்து வாங்கும்போது 60 சதவீத விலைக்கு கொடுக்கிறோம். ஆக ஒரு மாணவர், ஒரு புத்தகம் படிக்க மொத்தமே அதன் தொகையில் 20 சதவீதமே செலவு செய்கிறார். மாணவர்களுக்கு செமஸ்டர் ஆரம்பிக்கும் மாதங்களான ஜனவரி-மார்ச், ஜூன்-நவம்பர் வரைதான் சீஸன். அப்போதெல்லாம் இங்கே மாணவர்கள் கூட்டம் அலைமோதும். சனி, ஞாயிறுகளில் மட்டும் 10,000 பேருக்கு மேல் வந்து போவார்கள் என்றார்.
ஆறடிக்கு எட்டடி அளவே உள்ள குட்டிக் குட்டிக் கடைகள். கடைக்கு ரூ.1000 வாடகை கட்டி வந்தார்களாம். அதை, இப்போது பல மடங்கு உயர்த்திவிட்டதாம் மாநகராட்சி. பழைய வாடகையையே நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களாம். இவர்களது சங்கம், மருத்துவ சிகிச்சை கேட்டு வருபவர்களுக்கு உதவுவது, ரத்ததானம் முகாம் நடத்துவது போன்ற சமூக சேவையும் செய்து வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு மட்டும், இதுவரை 1407 பேருக்கு ரூ.30 லட்சம் வரை அளித்துள்ளார்களாம்.
சமூக சேவையில் பல அமைப்புகள் ஈடுபட்டிருக்கும் நிலையில், பழைய புத்தக சந்தை வைத்து உயிருக்குப் போராடும் பலருக்கும் உதவும் இவர்களது உன்னத சேவையையும் பலரும் பாராட்டவே செய்கின்றனர்.