Last Updated : 14 Jun, 2017 10:48 AM

 

Published : 14 Jun 2017 10:48 AM
Last Updated : 14 Jun 2017 10:48 AM

விதிமீறும் கட்டிடங்கள்.. விளையாடும் அதிகாரிகள்..

சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்து பல்வேறு பாடங்களை கற்றுத் தந்திருக்கி றது. இது மட்டுமல்ல, கடந்த காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு கட்டுமானம் மற்றும் தீ விபத்துக்கள் ஏராளமான பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றன. ஆனால், நாம் பாடம் கற்றுகொள்ளவில்லை என்பதுதான் வேதனை.

எதிர்பாராமல் நடப்பதே விபத்து. ஆனால் தமிழகத்தில், விபத்து நடக்கும் என்று தெரிந்தே விதிமுறைகளை மீறுகிறார்கள். உண்மையில், இதுபோன்ற விபத்துகளுக்கு அடிப்படை கார ணமே விதிமீறல்கள்தான். 2004-ல் திருச்சியில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் உடல் கருகினார்கள். அதே ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 இளம் தளிர்கள் கருகின. 2008-ல் சென்னை தி.நகர், ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியானார்கள். 2014-ல் சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டி டம் சரிந்து 61 பேரை அள்ளி விழுங்கியது. இவை அனைத்துக்கும் காரணம் விதிமுறை மீறல்கள்.

என்ன சொல்கிறது சட்டம்?

தமிழகத்தில் கட்டிடங்கள் கட்ட பல்வேறு சட்டங்கள், விதிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் உள்ளாட்சி அமைப்பின் அனுமதியுடன் வணிக கட்டிடங்கள் 6000 சதுர அடியில் தரைத்தளத்துடன் ஒரு மாடி கட்டிக்கொள்ளலாம். அல்லது ‘ஷில்ட்’ எனப்படும் தரைத்தளத்தில் தூண்கள் எழுப்பி அதற்கு மேல் இரு தளங்களை கட்டிக்கொள்ளலாம். குடியிருப்பு எனில் 6000 சதுர அடியில் தரைத்தளத்துடன் ஒரு மேல் தளம் கட்டிக்கொள்ளலாம்.

இதுவே, ஊரகப் பகுதிகளில் வணிக கட்டிடமாக இருந்தால் 2000 சதுர அடியில் தரைத்தளத்துடன் ஒரு மேல் தளம் கட்டிக் கொள்ளலாம். குடியிருப்பு கட்டிடங்கள் எனில் 4000 சதுர அடியில் தரைத்தளத்துடன் இரு மேல் தளங்கள் கட்டிக்கொள்ளலாம். இதைவிட கூடுதல் பரப்பளவு மற்றும் கூடுதல் தளங்கள் தேவை எனில் நகர் ஊரமைப்பு துறை மற்றும் உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதி பெறவேண்டும். சென்னையாக இருந்தால் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ) அனுமதி பெற வேண்டும்.

நகர்ப்புறங்களில் பெரிய கட்டிடங்களை கட்டும் போது அவை சாலையிலிருந்து குறைந்தது 6 மீட்டர் உள்ளே தள்ளியிருக்க வேண்டும். கட்டிடங்களுக்கு நடுவே நிலம் ஒதுக்க வேண்டும். கட்டுமானத்தின் மொத்தப் பரப்பளவில் 10 சதவீத காலி நிலப்பரப்பு ஒதுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் பிரதான சாலைக்காக 21 அடி ஒதுக்கப்பட வேண்டும். விற்பனைக்காக மனைகளைப் பிரிக்கும்போது 10 சதவீதம் நிலத்தை பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். விவசாய நிலத்தில் மனை பிரிக்கக் கூடாது. நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது. நிலத்துக்கு மேலாக உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லக் கூடாது என்று நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் ஒவ்வொன்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களின் பாதுகாப்பு தொடர்பானவை.

இவை தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களிலும் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் வகுக்கப்பட்டு குடியிருப்பு மண்டலம், வணிக மண்டலம், கல்வி மண்டலம், விவசாய மண்டலம், தொழிற்சாலை மண்டலம், கலவையான நிலங்கள் அடங்கிய மண்டலம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு கூகுள் செயற்கைக்கோள் வரைபட தளத்துடன் இணைக்கபட்டுள்ளன. மேற்கண்ட மண்டலங் களில் அவற்றின் தன்மை சார்ந்த கட்டுமானங் களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உண்மையில் நடப்பது என்ன?

உதாரணத்துக்கு, தற்போது தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தையே எடுத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்துக்கு நான்கு மாடிகள் கட்டிடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் கடந்த 2000-ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது. 2004-05-ம் ஆண்டு அந்த நிறுவனம் ஐந்தாவது மாடியை கட்டத் தொடங்கியது. 2006-ல் சி.எம்.டி.ஏ. நிறுவனம் 143(சி) பிரிவின் கீழ் அந்த நிறு வனத்துக்கு நோட்டீஸ் விடுத்தது. உயர் நீதிமன்றத்தில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் தடையாணை பெற்றது.

இதிலேயே சுமார் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இதற்கிடையே, 2011-ம் ஆண்டு தமிழக அரசு நகர ஊரமைப்புச் சட்டத்தில் பிரிவு 113(சி) பிரிவை சேர்த்து புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி 1.7.2007-க்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரை முறைப்படுத்த புதிய அரசாணை வெளியிடப் பட்டது. இந்த அரசாணையை சுட்டிக் காட்டியே நீதிமன்ற தடையாணையை நீட்டித்தது சென்னை சில்க்ஸ்.

அதேசமயம், 2012-ம் ஆண்டு உயர் நீதி மன்றம் மேற்கண்ட அரசாணையையே ரத்து செய்துவிட்டது. அத்துடன், விதிமீறல் கட்டிடங் களை வரைமுறைப்படுத்தும் வழிகாட்டுதல்களை வகுக்க நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டது. 2014, நவம்பர், 8-ல் அமைக்கப்பட்ட ராஜேஸ்வரன் குழு, 2015, அக்டோபர் 7-ல் தனது பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், இதுவரை அது கண்டு கொள்ளப்படவில்லை.

சென்னை தி.நகரில் மட்டும் 86 பெரிய கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள் ளன. சென்னை ஜார்ஜ் டவுனில் 99 சதவீத (32,000) கட்டிடங்களில் விதிகள் மீறப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் சுமார் மூன்று லட்சம் கட்டிடங்கள் இப்படி இருக்கின்றன. சென்னைக்காக உருவாக் கப்பட்ட மாஸ்டர் பிளானில் சென்னை நகரில் மட்டும் 36 வெள்ள அபாய தாழ்வு மண்டல பகுதி கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அங்கெல்லாம் விதிமுறை மீறி கட்டிடங்களை கட்டிவிட்டார்கள். இங்கெல்லாம் தான் சென்னை வெள்ளத்தின்போது உயிர் சேதங்கள் ஏற்பட்டன.

அதிகாரிகளே சொல்லித் தருகிறார்கள்

இதுகுறித்து நகர் ஊரமைப்பு துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “இது ஒரு துறை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தொடங்கி நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள் வரை இதில் தொடர்பில் இருக்கிறார்கள். உள்ளூர் திட்டக் குழுமமும், நகர ஊரமைப்புத் துறையும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு சிலர் நேர்மையாக இருந்தாலும் அடுத்தடுத்த மட்டங்களில் இருக்கும் அதிகாரிகள் தவறு செய்வதால் விதி மீறல்களை தடுக்க முடியவில்லை.

எப்படி எல்லாம் விதிகளை மீறலாம் என்று மக்களுக்குச் சொல்லித் தருவதே சில அதிகாரிகள்தான். ஒரு கட்டிடம் கட்டும்போதே எப்படி விதிமுறைகளை மீறலாம், நோட்டீஸ் விடுத்தால் நீதிமன்றத்தில் எதைச் சொல்லி தடையாணை பெறலாம் என்பது வரை ஆலோசனை தருகிறார்கள். விரைவில் விதிமீறல் கட்டிடங்களுக்கான வரைமுறை வழிகாட்டி வந்துவிடும் என்று சொல்லியே 90 சதவீதம் கட்டிடங்களில் விதிமீறல்கள் நடக்கின்றன. அரசு நினைத்தால், மின் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்புகளை தரமறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வீதிமீறல் கட்டிடங்களை கட்டுப்படுத்தலாம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x