

விவசாயம் சீரழிந்துபோனதற்குப் பயிர்வாரி முறையைப் பின்பற்றாததே காரணம் என்று உறுதியாக நம்புபவர், பட்டறிவும் பட்டப்படிப்பும் கொண்ட முதிர்ந்த விவசாயியான சி.வையாபுரி. சேலம் ஆறகழூரைச் சேர்ந்த இவர், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவராக இருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் வேளாண் உயர்மட்டக் குழுவின் உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்தவர். அவருடன் பேசினேன்.
பயிர்வாரி முறையைப் பற்றிச் சொல்லுங்களேன்...
நஞ்சை நிலத்தில் நஞ்சை பயிர் செய்யணும், புஞ்சை நிலத்துல புஞ்சைப் பயிர் பண்ணணும்னு சொல்றதுதான் பயிர்வாரி முறை. தமிழ் மக்களால் தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்பட்ட இயற்கை வழிச் சாகுபடி முறைதான் இது. ஆறு, ஏரி, கண்மாய் மூலம் நல்ல நீர்ப்பாசன வசதியுள்ள நஞ்சை நிலத்தில், நெல், வாழை, கரும்பு பயிரிடலாம். இப்படி எந்தப் பாசன வசதியும் இல்லாத, வானம் பார்த்த பூமியான புஞ்சையில் அதே பயிர்களைப் போட்டால் தண்ணீர்த் தட்டுப்பாடு வரத்தானே செய்யும்.
இந்தப் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி எதுவென்று நினைக்கிறீர்கள்?
நாமெல்லாம் வறட்சி பூமி என்று சொல்கிற ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுக்கடுக்காகக் கண்மாய்களையும், நீர்ஏந்தல்களையும் வெட்டிவைத்தார்கள் சேதுபதி மன்னர்கள். மழைநீரை நீர்நிலைகளில் சேமித்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் திறமையாகப் பயன்படுத்தினார்கள். கூடவே, ‘குடிநீருக்காக மட்டுமே கிணறு வெட்டலாம்; எக்காரணம் கொண்டும் கிணறு தோண்டி விவசாயம் செய்யக் கூடாது’என்றும் கட்டுப்பாடு விதித்தார்கள். அவ்வாறு விவசாயம் செய்தால், வறட்சிக் காலத்தில் குடிநீர்ப் பிரச்சினை வந்துவிடும் என்பதாலேயே இந்தக் கட்டுப்பாடு. அந்த உன்னதமான தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்குக் கிணறு வெட்டியும், ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் எடுத்ததுதான் பிரச்சினையின் தொடக்கம். மின்சாரம் வந்தபிறகு, நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
மின்சாரம் விவசாயத்துக்கு உதவிதானே செய்கிறது?
1936-லேயே சேலம் - ஈரோடு எலெக்ட்ரிசிட்டி கம்பெனி வந்தது. கூடவே, மின்சார பம்பும் வந்தது. ஆனால், பம்பு செட் மோட்டார் பயன்பாட்டால், மாட்டை வைத்து இறைக்கிற விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்று 40 அடிக்குக் கீழே குழாய் இறக்கி தண்ணீர் எடுக்கக் கூடாது என்று வெள்ளைக்காரர்கள் சட்டம் போட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்கூட, ஒரு விவசாயக் கிணற்றுக்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்றால், அந்தக் கிணற்றில் இருந்து 1,200 கஜம் தூரத்துக்குள் வேறு விவசாயக் கிணறு இருக்கக் கூடாது என்று விதி வைத்திருந்தார்கள். 1971-ல் திமுக ஆட்சியில் யார் இணைப்பு கேட்டாலும் கொடுக்கலாம் என்று விதியைத் தளர்த்தினார்கள். இலவச மின்சாரம் கொடுத்தார்கள். ஆழ்துளைக் கிணறுகளும் பெருகின. இப்போது நிலை என்ன?
இந்தக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டால், விவசாயத் தொழில் மேலும் நசிந்துவிடாதா?
இயற்கை விவசாயம் பற்றிப் பேசுகிறவர்கள், நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உரிஞ்சுவதற்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். நான் வேளாண் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்தபோது, தமிழ்நாட்டில் குடிநீர்த் தேவைக்குத் தவிர, எதற்காகவும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் எம்ஜிஆரிடமே வலியுறுத்தினேன். அப்போது அது ஏற்கப்படவில்லை. இனியும் செய்யவில்லை என்றால், குடிக்கக் கூடத் தண்ணீர் இருக்காது.
நடந்தது போகட்டும்.. தீர்வு இருக்கிறதா?
கிராமம்தோறும் நஞ்சை, புஞ்சை கணக்கு அரசிடம் இருப்பதால், பயிர்வாரி முறையைக் கண்டிப்புடன் செயல்படுத்தலாம். நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுக்கச் சட்டம் வேண்டும். அனைத்து நதிகளையும் நாட்டுடமை ஆக்குவது காலத்தின் தேவை. உள்ளூர் நதிகளில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகள் வரையில் கடைமடைப் பகுதிக்கு வழங்க வேண்டிய பாசன முன்னுரிமையை நிலைநாட்ட வேண்டும். வனவிலங்குகளின் நலன் கருதி, மலை மற்றும் வனப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளுக்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.