

மக்கள் நலப் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் மதுரை மத்திய சிறையைச் சேர்ந்த 15 கைதிகள் அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியை மேற்கொண்டனர்.
தமிழக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை மன அழுத்தத்தில் இருந்து காக்கும் வகையிலும், நன்னெறிப்படுத்தும் வகையிலும் சிறைத் துறை நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு பல்வேறு
தொழில் பயிற்சிகள், பணி வாய்ப்புகள் சிறை வளாகத்திலேயே அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கைதிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுத்த சிறைத் துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன்படி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 கைதிகள் சனிக்கிழமை காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களில் படிந்திருந்த தூசுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த பணி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
இதுபற்றி மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறியது:
சிறையிலிருந்து பொது இடங்களுக்கு கைதிகளை அழைத்துவந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுத்தும்போது, அவர்களுக்கு மன அழுத்தம் குறையும். மீண்டும் தவறு செய்யக்கூடாது என்ற நல்லெண்ணம் மேலோங்கும். எனவே கைதிகளை இதுபோன்ற பணிகளுக்கு ஈடுபடுத்துமாறு ஏ.டி.ஜி.பி. திரிபாதி அறிவுறுத்தினார். அதன்பேரில் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் கைதிகளைத் தேர்வு செய்து அழைத்து வந்துள்ளோம். மாதத்துக்கு 2 முறையாவது இதுபோன்ற பணிகளில் கைதிகளை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.