Last Updated : 04 Apr, 2017 09:51 AM

 

Published : 04 Apr 2017 09:51 AM
Last Updated : 04 Apr 2017 09:51 AM

நீதித்தன்மையைக் கடைப்பிடிக்கும் நீதித்துறை அவசியம்

அரசியல் கட்டுரைகள் சோர்வு தட்டக்கூடாது என்று கிரிக்கெட்டை உதாரணம் காட்டுவேன். இம் முறை திரைப்படப் பாடல் வருகிறது. 1969-ல் அசோக் குமார், ஜீதேந்திரா, மாலா சின்ஹா நடித்த ‘தோ பாய்’ திரைப்படம் வெளியானது. அதில் அசோக் குமார் நீதிபதி, ஜீதேந்திரா போலீஸ் அதிகாரி. குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தண்டிப்பதா, மன்னிப்பதா என்ற தர்மசங்கடம் அசோக் குமாருக்கு. அவர் பாடுவதற்காக ஆனந்த் பக்ஷி ஒரு பாடலை எழுதி, முகம்மது ரஃபி அதைப் பாடியிருப்பார். “இஸ் துனியா மே ஓ துனியாவாலோ, படா முஷ்கில் ஹை இன்ஃசாப் கர்னா, படா ஆசான் ஹை தேனா சஜாயேன், படா முஷ்கில் ஹை பர் மாஃப் கர்னா” இதுதான் பாடல் வரி. நீதிபதியாக இருப்பது மிகவும் கடினம், ஒருவரை மன்னிப்பதோ, தண்டிப்பதோ எளிது என்பது பொருள். இது பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஒரு செய்தியைப் பிரசுரித்துவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்வது அல்லது பிரசுரிக்காமல் இருந்துவிட்டு அதற்கு விளக்கம் கொடுப்பது என்று இரண்டு விதமான தர்மசங்கடங்கள் பத்திரிகை ஆசிரியருக்கு.

நான் இப்போது சொல்ல வருவது 1998-ல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியில் அமர்ந்த ஒருவர் தொடர்பான செய்தியைப் பற்றியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மவுனத்தைக் கலைக்கிறேன். அந்த நீதிபதி குறித்து எங்களுடைய சட்டப்பிரிவு ஆசிரியர் ஒரு செய்தியைத் திரட்டி தகவல்களைச் சரிபார்த்துவிட்டார். அந்த நீதிபதி பணத்தை மிச்சம் பிடித்திருக்கிறார், தான் வகித்த பதவிக்குப் பொருத்தமில்லாத வகையில் பணப் பயன் ஆதாயம் அடைந்திருக்கிறார், தனக்குக் கிடைத்த பரிசுகளைப் பற்றி முழுதாகக் கணக்கு காட்டவில்லை, அவருடைய நிலத்தில் வேலை செய்தவர்களுக்கு உரிய பங்கை அளிக்காமல் இருந்திருக்கிறார் என்ற புகார்கள் அச்செய்தி யில் இருந்தன. அந்தத் தகவல்களை, ஒருமுறைக்குப் பலமுறை சோதித்து உறுதி செய்துகொண்டோம்.

அது மிக முக்கியமான செய்தி என்பதால் நான் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கு முன்னணியில் இருந்த முதல் 12 வழக்கறிஞர்களில் 10 பேரிடம் ஆலோசனை கலந்தோம். அதைப் பிரசுரிக்க வேண்டாம் என்று 8 பேரும், பிரசுரிக்க வேண்டும் என்று 2 பேரும் கருத்து தெரிவித்தனர்.

ஒரு தகவல் உண்மையாகவும், சட்டப்படியாகவும் இருக்கும்பட்சத்தில் பிரசுரித்தே ஆக வேண்டும் என்று அந்த இருவர் வலியுறுத்தினர். பலராலும் மதிக்கப்படும் நீதித்துறையை அவமதித்துவிடக்கூடாது, இச் செய்தியால் அப்பாவியான நீதிபதி மனம் புண்பட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து நிறுத்தினோம். “இந்தச் செய்தியைப் பிரசுரித்தால் தலைமை நீதிபதி நம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவாரா?’ என்று கேட்டேன். ‘இல்லை, தற்கொலை செய்துகொண்டு விடுவார்’ என்று பதில் கிடைத்தது. அந்த பதில் எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரேயொரு விஷயத்துக்காக நாங்கள் காத்திருந்தோம், அது அந்த நீதிபதியிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்த விளக்கம். பதவியில் இருக்கும் நீதிபதி, பத்திரிகைகளுடன் பேசக்கூடாது என்ற மரபைச் சுட்டிக்காட்டிய அவருடைய அலுவலகத்தினர் பதில் தரவில்லை.

உடனே நான், வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த சுஷ்மா ஸ்வராஜ், அருண் சௌரி ஆகியோருடன் இது தொடர்பாக ஆலோசனை கலந்தேன். அந்த நீதிபதியையும் அவருடைய குடும்பத்தையும் நன்கு தெரிந்திருந்த அவர்கள், “அவர் அப்படிப்பட்டவர் அல்ல” என்றனர். “நீங்களே அவரை நேரில் சந்திக்கலாமே” என்று சுஷ்மா எனக்கு யோசனை தெரிவித்தார். நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அவருடைய வீட்டுக்குச் சென்றபோது எனக்கு எழுந்த சந்தேகங்கள் தொடர்பான ஆவணங்கள், குறிப்புகளை நீதிபதியே என்னிடம் காட்டினார். வரி செலுத்திய ஆவணங்கள், நெல் விற்ற வருமானக் கணக்கு, குழந்தைகளின் திருமணப் பத்திரிகைச் செலவுக் கணக்கு, திருமணச் செலவுக்கான பேரேட்டுக் கணக்கு, மொய்ப் பணம் ஆகியவை அதில் இருந்தன. ஆறு அரை மூட்டை நெல் கணக்கு மட்டும் உதைத்துக் கொண்டே இருந்தது. அப்போது அதன் விலை மதிப்பு ரூ.3,000 அல்லது ரூ.4,000 தான். ஒரு தலைமை நீதிபதியைச் சிக்க வைக்கும் ஆவணங்கள் கிடைத்துவிட்டதாக இறுமாந்தோமே கடைசியில் சின்ன கணக்குப் பிசகுகள்தானா என்று மனம் தளர்வுற்றோம்.

நாட்டின் தலைமை நீதிபதியை, ஆறு அரை மூட்டை நெல் மதிப்பு கணக்கில் வரவில்லை என்பதற்காக ஊழல் பேர்வழி என்று முத்திரை குத்துவதா என்று தீர்மானித்து அந்தச் செய்தியைக் கைவிட்டோம். ஒரு அரசியல்வாதி அல்லது அரசு அதிகாரி என்றால் இப்படி பலமுறை சரிபார்த்து, பலரிடம் ஆலோசனை கேட்டு, இறுதியில் சந்தேகப்படும் நபரையே சந்தித்து விளக்கம் பெற மெனக்கெடுவோமா என்றும் என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

உலகம் முழுக்கவும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே நிறுவனம் நீதித்துறை தான். இரண்டு பேருக்கு இடையில் சண்டை மூண்டு, அது தீராவிட்டால் என்ன சொல்கிறார்கள் இருவரும்? “உன்னை கோர்ட்ல பாத்துக்கறண்டா” என்கிறார்கள். தங்களுடைய பிரச்சினை எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் விசாரித்து நியாயமாகச் சிந்தித்து தீர்ப்பு வழங்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக எப்படி நடப்பது என்று நீதித்துறையினர் தங்களுக்குள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். நிர்வாகத் துறையின் செயல்பாட்டில் அடிக்கடி குறுக்கிட்டு ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவைப் போட்டுவிடுவது சரியா என்றும் நீதித்துறை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

காற்றில் கலக்கும் மாசைத் தடுப்பது, சட்டவிரோதக் கட்டுமானங்களை அடையாளம் கண்டு அகற்றுவது, கிரிக்கெட் சங்க நிர்வாகம் என்று எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது அநாவசியம் என்று நீதித் துறை உணர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகளில் 70% பேர் ஏதாவதொரு கமிஷனுக்கு தலைமை தாங்குகின்றனர். நீதிபதிகளின் ஓய்வு வயதை 70 ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 60, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 என்று பதவி ஓய்வு வயதை நிர்ணயிக்கக் கோரிக்கைகள் விடப்படுகின்றன. ஓய்வு பெறும் தலைமை நீதிபதியை ஆளுநராக நியமிப்பது முறையா? நீதித் துறை இந்தக் கேள்விகளைத் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,

இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,

இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.

தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x