

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்கத் திட்ட மையத்தை தன்னாட்சி பெற்ற மையமாக அறிவிக்கும் விழா, காங்கிரஸ் கட்சி விழாவாக நடந்து முடிந்தது.
மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அதிகளவில் பங்கேற்றிருந்தனர். இதனால், அரசு விழாவா?, அரசியல் விழாவா? என்ற சந்தேகம் எழுந்தது.
காங்கிரஸார் ஆக்கிரமிப்பு
நெல்லை – காவல்கிணறு நான்கு வழிச்சாலையில், மையத்தின் முகப்பு பகுதியில் நாராயணசாமியை வரவேற்று, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் படங்களுடன் பிளக்ஸ் போர்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இதுபோல், வளாகத்துக்குள்ளேயும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் பிளக்ஸ் போர்டுகள் கட்டப்பட்டிருந்தன. விழா மேடையிலும் காங்கிரஸாரே ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
கனிமொழிக்கு அழைப்பில்லை
விழாவுக்கு கனிமொழி எம்.பி. வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. அவரும் விழாவில் பங்கேற்கவில்லை. அவரை புறக்கணித்துவிட்டதாக கூறப்படுவது குறித்து, இணை யமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, “விதிமுறைப்படி விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.
“கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி எந்த புரோட்டகால்படி அழைக்கப்பட்டிருந்தார்?” என்று கேள்வி எழுப்பியபோது, “திரவ இயக்க திட்ட மையத்திலுள்ள தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அவர் இணைந்து செயலாற்றுகிறார். அதனால் அவர் அழைக்கப்பட்டார்” என, உப்புச்சப்பு இல்லாமல் பதில் தெரிவித்தார்.
சார் ஆட்சியர் அவமதிப்பு
விழா தொடங்குமுன் மேடையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், தமிழக அரசின் ஒரே அதிகாரியாக அமர்ந்திருந்தார். ஆனால், அமைச்சர் வரும் முன் அவரை மைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் மேடையிலிருந்து கீழே இறக்கிவிட்டனர். இதைப் பார்த்ததும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கூக்குரலிட்டனர். ஆட்சியர் ஒருவரை மேடையிலிருந்து இறக்கிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மீண்டும் அவரை மேடையில் அமரவைத்தனர்.
இதுகுறித்து, நாராயணசாமியிடம், செய்தியாளர்கள் கேட்ட போது, “அவமதிப்பு எதுவும் நடைபெறவில்லை” என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தார். பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்துவிட்டு கிளம்பினார்.
பத்திரிகையாளர்கள் போராட்டம்
விழா தொடங்கும் முன், செய்திகளை சேகரிக்க மையத்தி னுள் உள்ள கலையரங்குக்கு செல்ல, பத்திரிகையாளர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்ப ட்டது. ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் அமைச் சர் நாராயணசாமியை முற்றுகையிட் டனர். அவரது கார் உள்ளே நுழையவிடாமல் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 10 நிமிடங்களுக்கு பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டத்துக்குப்பின் விழா நடைபெற்ற பகுதிக்கு பத்திரிகை யாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பங்கேற்றவர்கள்
திருநெல்வேலி எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி. விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், திட்ட மைய இணை இயக்குநர் கார்த்தீசன், திட்ட மையப் பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம். மனோகரன், கூடுதல் செயலாளர் ஆர். ராஜன், திரவ இயக்க திட்ட மைய இயக்குநர் எம். சந்திரன்டத்தன், முன்னாள் இயக்குநர் ஏ.இ.முத்துநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.