Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM

தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் பல மடங்கு மின் கட்டணம் வசூல்

வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் அதிக மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது என்றும், ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்திய மின்சார சட்டம் 2003-ன் படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தைதான், மின் பகிர்மான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, மீட்டரில் பதிவான யூனிட்டுகளை கணக்கிட்டு, ஒரு யூனிட்டுக்கு ரூ.7 முதல் ரூ.9 வரை வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.

அதிக கட்டணம் வசூலிப்பதற்கு வீட்டு வாடகைதாரர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக மின்வாரியமோ, மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் தேசிய கவுன்சில் உறுப்பினர் மற்றும் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.கே.பால சுப்ரமணியன் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: வீட்டு உரிமையாளர் களால் பாதிக்கப்படுவோர் ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. அதனால், சட்ட ரீதியாக பிரச்சினையை எதிர்கொள்ளத் தயங்குகின்றனர். ஆனாலும் எங்கள் நுகர்வோர் அமைப்பின் மூலம் இந்தப் பிரச்சினையை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிடுவோம். வீடு வாடகைக்கு எடுக்கும் போதே மின் கட்டணம், குடிநீர் கட்டணம் குறித்து வீட்டு உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

வாடகைதாரர்களுக்கு உதவி

மின்சார சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு 3 மாதச் சிறைத் தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிகள் உள்ளன. இந்தப் பிரச்சினையில் வீட்டு வாடகைதாரர்களுக்கு நாங்கள் சட்டரீதியாக உதவத் தயாராக உள்ளோம் என்றார்.

வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர். ‘‘ஒரே இணைப்பில் பல வீடுகள் இருக்கும் நிலையில், மின் பயனீட்டு அளவு ஒவ்வொருவருக்கும் குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக 500 யூனிட்களுக்கு மேல் சென்று விடுகிறது. அதனால்தான், 500 யூனிட்களுக்கு மேல் உள்ள மின் கட்டணத்தை நாங்கள் வசூலிக்கிறோம்” என்று பாரிமுனையைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் கணேஷ் மணி தெரிவித்தார்.

கூடுதல் மீட்டர் இணைப்பு

ஆனால், வீட்டு உரிமையாளர்கள் கூறும் காரணங்கள் நியாயமானதல்ல என்று மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘ஒரே மின் இணைப்பில், பல வீடுகள் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், ஒரே இணைப்புக்கு கூடுதல் மின் மீட்டர் இணைப்புகளை கூடுதல் வைப்புத்தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்த முன்வருவதில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக வீட்டு வாடகைதாரர்கள், ஒழுங்கு முறை ஆணையத்தை அணுகி, ஆதாரத்துடன் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தயாராக உள்ளோம்’’ என மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x