

குறைந்த ஊதியம் மற்றும் கூடுதல் பணித்திறன் காரணமாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
மளிகைப் பொருள்கள் வர்த்தகம் மட்டுமின்றி, எண்ணெய் வகைகள் உற்பத்தி, பஞ்சு மில்கள், பட்டாசு மற்றும் அச்சுத் தொழில் என பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டது விருதுநகர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் முக்கியத் தொழில் நிறுவனங்கள் உள்ள இடம் சிவகாசியாகும். சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளும், அச்சகத் தொழில் நிறுவனங்களும், விருதுநகர் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மில்களும் இயங்கி வருகின்றன.
வணிக நிறுவனங்களில்…
குறிப்பாக சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அச்சக நிறுவனங்களில் மட்டுமின்றி மளிகைக் கடைகள் போன்ற சிறிய வணிக நிறுவனங்களிலும் ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குடும்ப வறுமை, போதிய விழிப்புணர்வு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கையாலாகாத பெற்றோரால் குழந்தைகள் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிந்து மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வந்தாலும் அவை எதுவும் 100 சதவிகித பலனை எட்டவில்லை என்பதே உண்மை. 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் எக்காரணம் கொண்டும் எவ்விதப் பணிகளிலும் அமர்த்தக் கூடாது என்றும் மீறும் நிறுவன உரிமையாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்ற அறிவுறுத்தியும் ஏராளமான நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
சிறப்புப் பயிற்சி மையங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 44 குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இந்தச் சிறப்புப் பள்ளிகளில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 662 மாணவ, மாணவிகள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் ஒருவருக்கு மாத உதவித்தொகையாக ரூ.150-ம், ஆண்டுக்கு 4 இலவசச் சீருடைகளும், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் காலணிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற நிலை அடையப்படவில்லை.
இதுகுறித்து, தேசிய குழந்தைத் தொழிலாளர் தடுப்புத் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்திலுள் சில நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது ஆய்வின்போது தெரியவருகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பள்ளி மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு லட்சம் கடிதங்கள் மாவட்ட ஆட்சியரால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, புதிய முயற்சியாக சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் ஜன. 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை “அரும்புகள்” என்ற பெயரில் குழந்தைகள் குறும்பட திரைப்பட விழா நடத்தப்படவுள்ளது. இதில், குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு விதைக்கப்பட வேண்டிய நேர்மறை சிந்தனைகள், குழந்தைத் திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்படவுள்ளன.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளை மையமாகக்கொண்டு கீதாஇளங்கோவன் இயக்கிய “லிட்டில் ஸ்பேஸ்”, நேர்மையின் மதிப்புகள் குறித்து ராஜ்குமார் இயக்கிய “பாடசாலை”, குழந்தைத் திருமணம் பற்றி ராஜு இயக்கிய “இனிஒரு விதி செய்வோம்”, எய்ட்ஸ் விழிப்புணர்வுபற்றி அருண்ராஜ் இயக்கிய “காட் யூ”, குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி சுப்புராஜ் இயக்கிய “செடி”, “கீகீ” மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து ராஜா மற்றும் அமுதன் இயக்கிய “தேவதைகள்” போன்ற குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.
மேலும், இந்தக் குறும்படங்களை சுமார் 2,500 மாணவ, மாணவிகள் காணவுள்ளனர். காலை மற்றும் மதிய நேரங்களில் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பார்வையிடவுள்ளனர். மேலும், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், குழந்தைகளுடன் விவாதம் மற்று்ம கருத்துப் பரிமாற்றம் மட்டுமின்றி குழந்தைகளுக்கான விழிப்புணர்வுக் கண்காட்சிகளும் நடத்தப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பள்ளி சென்று பேனா பிடிக்க வேண்டிய வயதில், பட்டறைகளில் குழந்தைகள் சுத்தியல் பிடிக்க நேரும் அவலம் எப்போது தீரும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.