Published : 27 Jun 2017 10:18 AM
Last Updated : 27 Jun 2017 10:18 AM

"ஏழு முதலமைச்சர்களுக்கு காரோட்டினேன்..!"

ராஜன் என்கிற கோவிந்தராஜ் - கோவை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கார் சாரதி. 71 வயதைக் கடக்கும் இவர், முதலமைச்சர்களாக இருந்த, இருக்கின்ற 7 பேருக்கு பல சந்தர்ப்பங்களில் கார் ஓட்டிய கண்ணன்.

கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன். குடும்பச் சூழல் காரணமாக ஆறாவதோடு படிப்பை விட்டவர், ஓட்டல் வேலை, லாரி டிரைவர் வேலை என கிடைத்த வேலைகளை எல்லாம் பார்த்தார். இறுதியாக, கோவையில் தோழிற்சாலை ஒன்றில் பெயிண்டரானார். அப்போதுதான், கார்களை கையாளும் இவரது லாவகத்தைப் பார்த்த மாக்சிஸ்ட் தோழர்கள், இவரை கட்சி அலுவலகத்தில் டிரைவராக சேர்த்தார்கள்.

கார் ஓட்டும் வாய்ப்பு

பிறகு நடந்தவைகளை அவரே தொடர்கிறார். ’’தோழர்களோடு சேர்ந்த பிறகு, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களோடு கட்சி நிகழ்ச்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் போவேன். அப்போதுதான், பல மாநிலங்களின் முதல்வர்களுக்கும் முன்னாள் முதல்வர்களுக்கும் கார் ஓட்டும் வாய்ப்புகள் எனக்கு அமைஞ்சுது.

1977-ல் கோவை வந்த நம்பூதிரி பாட்-ஐ நான் தான் பாலக்காட்டிலிருந்து கூட்டிவந்து திரும்ப அழைத்துச் சென்றேன். இதேபோல், ஈ.கே.நாயனாரை திருச்சூரி லிருந்து கோவை, பாலக்காடு, ஈரோடு, சேலம் பொதுக்கூட்டங்களுக்கு காரில் அழைத்து வந்திருக் கிறேன். அச்சுதானந்தன் எனது காரில் பலமுறை பயணித்திருக்கிறார். கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கணேஷ் கொலை செய்யப்பட்ட சமயத்தில் திரிபுரா முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியை ராஜ பாளையத்திலிருந்து கோவைக்கு பத்திரமாய் அழைத்து வந்தேன்.

திரிபுரா முதல்வராகும் முன்பு மாணிக் சர்க்காரை பாலக்காட்டிலிருந்து கோவைக்கு அழைத்து வந்தேன். 1987-ல் சென்னையில் நடந்த ஏ.ஐ.ஒய்.எஃப். மாநாட்டுக்கு வந்த ஜோதிபாசுவுக்கு கார் ஓட்டினேன். கேரளத்தின் இப்போதைய முதல்வர் பினராயி விஜயனுக்கும் இதற்கு முன்பு கார் ஓட்டி இருக்கிறேன். ஆனால், முதல்வரான பிறகு அவருக்கு காரோட்டும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை’’ என்கிறார் ராஜன்.

மிரண்டுவிட்டேன்

காரோட்டும் பயணத்தின்போது இந்தத் தலைவர்களைப் பற்றி தான் அறிந்துகொண்ட விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ராஜன். ’’நிருபன் சக்கரவர்த்தியை ராஜபாளையத் திலிருந்து கோவைக்கு அழைத்து வந்தபோது வழியில் டீ சாப்பிட வேண்டும் என்றார். மடத்துக்

குளம் பக்கம், ஓலைக்கூரைபோட்ட ஒரு டீக்கடை யில் காரை நிறுத்திவிட்டு, ‘வித் சுகரா வித்தவுட் சுகரா?’ என்று கேட்டேன். ’வித் சுகர்; செவன் டீ ஸ்பூன்’ என்றார் நிருபன். அவர் சொன்னதைக் கேட்டு

மிரண்டுவிட்டேன். ’இவ்வளவு சுகர் கேட்டவங்கள இதுவரைக்கும் நான் பார்க்கலை’ன்னு சொல்லி டீக்கடைக்காரரும் அசந்துட்டார்.

இதேபோல், பாலக்காட்டிலிருந்து கோவைக்கு எனது காரில் பயணித்த மாணிக் சர்க்காரிடம், ‘என்ன.. டிரைவர் காரை ரொம்ப வேகமா ஓட்டினாரா?’ என்று தோழர்கள் கேட்டபோது ’குட் டிரைவிங்; வெரி, வெரி குட் டிரைவர்!’ன்னு எனக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். அச்சுதானந்தனை காரில் ஏற்றும் முன்பாக காருக் குள்ள சுக்கு வெள்ளமும், சீரக வெள்ளமும் தயாரா இருக்கணும். அவருக்கு வழித்துணை அதுதான்.

எத்தனி ராஜன்மார்

அரசு விருந்தினர் மாளிகையில் மட்டுமே தங்கும் ஈ.கே.நாயனாருக்கு காலையில் 2 இட்லி இருந்தால் போதும். அதை அவர், ‘ரண்டு இட்டலி..’ என்று தான் கேட்பார். இட்லி இல்லாட்டி, அவிச்ச நேந்திரன் பழமும், குழாய் புட்டும் கேட்பார். என்னையும் தன்னோடு உட்காரவைத்து, ’சாப்பிடு’ என்பார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் ’எப்படி இருக்கே ராஜன்? நம்ம தேசத்துலதான் எத்தனி ராஜன்மார்’ என்று சொல்லிவிட்டு கேரளத்தில் ராஜன் என்ற பெயர்கொண்ட கம்யூனிஸ்ட் தோழர்களின் பெயர்களை அடுக்குவார்.

ஆவியில் வேகவைத்த காய்கள்னா நம்பூதிரி பாட் விரும்பிச் சாப்பிடுவார். காரம் போடக் கூடாது. பெப்பரும் சால்ட்டும் தனியா ஒரு தட்டுல வெச்சிடணும். அவருக்கிட்ட இன்னொரு பழக்கம் இருக்கு. அவர் சட்டைய அயர்ன் பண்ணிப் போட்டு நான் பார்த்ததே இல்லை. துவைச்சு மடிச்சு வெச்சத அப்படியே தான் எடுத்துப் போடுவார்’’ விழிகள் விரிய வியந்து சொன்னார் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x