Last Updated : 22 Nov, 2013 01:50 PM

 

Published : 22 Nov 2013 01:50 PM
Last Updated : 22 Nov 2013 01:50 PM

நெல்லை : மெக்கானிக் பணியில் கலக்கும் பார்வையற்ற சகோதரர்கள்

திருநெல்வேலி அருகே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதில் பார்வையற்ற சகோதரர்கள் இருவர், நிபுணர்களாகத் திகழ்கின்றனர்.

திருநெல்வேலி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், மூன்றடைப்பு அருகேயுள்ள சிறிய கிராமம் மருதகுளம். இங்கு பார்வையற்ற சகோதரர்கள் இ.முத்துக்குமார் (27), இ.நயினார் (25) ஆகியோர் நடத்திவரும் டூ வீலர் ஒர்க் ஷாப் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

முத்துக்குமார் 5-ம் வகுப்பு படித்தபோது திடீரென்று பார்வை மங்கியது. கண் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்தபோது பார்வை நரம்பு கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், அவரது பார்வை குறைபாடு நீங்கவில்லை. படிப்படியாக பார்வை மங்கி, கடைசியில் அறவே பார்வை தெரியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிச்சம் தெரிந்தது. அதுவும் பின்னர் இல்லாமல் போனது. இதுபோல், இவரது தம்பி நயினாருக்கும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வலது கண்ணில் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கண்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு கண்ணில் தற்போது மங்கலாக பார்வை இருக்கிறது. இதற்காக அவர் கண்ணாடி அணிந்திருக்கிறார்.

பார்வையற்ற இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை மருதகுளத்தில் மண் குடிசையொன்றில் டூ வீலர் ஒர்க் ஷாப் நடத்தி வந்தனர். பஞ்சர் ஒட்டுவது, செயின் பிராக்கெட் மாற்றுவது, கார்பரேட்டர் கிளீனிங், போர்க் பெண்ட் எடுப்பது, என்ஜின் வேலை, காயில் செக் அப், ஹாரன், லைட் பழுது பார்ப்பது என்று அனைத்து வகையான பழுதையும் நீக்குவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

தங்களுக்கு ஒர்க் ஷாப் அமைக்கவும், தேவையான உபகரணங்களை வாங்கவும், வங்கி கடன் கேட்டனர். இதற்காகா, 2009ம் ஆண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, அப்போதைய ஆட்சியர் எம். ஜெயராமன் முன்னிலையில் ஒரு பைக்கை கழற்றி, மாட்டிக் காட்டினர்.

இதையடுத்து, திருநெல்வேலி யிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வேளாண் வளர்ச்சி பிரிவிலிருந்து, ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. பின்னர் மருதகுளம் சாலையோரத்தில் ஊனமுற்றோர் நலவாரியத்தால் அளிக்கப்பட்ட பெட்டிக்கடையில் அவர்களது ஒர்க் ஷாப் செயல்படத் தொடங்கியது.

சில மாதங்களுக்கு முன் இங்கு கம்ப்ரஸர் வைக்கவும், மின்னிணைப்பு பெறவும் மீண்டும் அவர்களுக்கு கடனுதவி தேவைப்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை மீண்டும் அணுகினர். அவர்களும், கடன் வழங்க பரிந்துரைத்து, வங்கிக்கு கடிதம் அளித்தனர். ஆனால், கடன் வழங்க வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதன்பின், 3 காசு வட்டிக்கு ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கி, கம்ப்ரஸர் செட் வாங்கி வைத்திருக்கிறார்கள்.

அவர்களிடம் பேசினோம். ஏற்கனவே, பாரத ஸ்டேட் வங்கியில் நாங்கள் வாங்கிய கடனை 7 மாதத்துக்குள்ளாகவே கட்டி முடித்திருந்தோம். மறுபடியும் கடன் கேட்டு விண்ணப்பித்த போது, வங்கி அதிகாரிகள் அலட்சியப்படுத்திவிட்டனர்.

கண் பரிசோதனைக்கு செல்லும்போது பார்வை இழப்புக்கான காரணம் குறித்து மருத்துவர்களும் சரியான பதில் தெரிவிப்பதில்லை. இதனால், மருத்துவமனைகளுக்கு சென்றும் சலித்துப் போயிருக்கிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.

மருதகுளத்திலிருந்து தோட்டாக்குடி, பாக்கியநாதபுரம், மலையன்குளம், அ. சாத்தான்குளம், மூலகரைப்பட்டி என்று 15 கி.மீ. சுற்றளவுக்குள் சென்று, டூ வீலர் பஞ்சர் பார்த்து வருகிறார்கள். ஓரளவுக்கு கிட்டப்பார்வையுள்ள நயினார் மொபட் ஓட்ட, அதில் முத்துக்குமார் ஏறிச் சென்று வருகிறார்.

இச்சகோதரர்களை பார்த்து பரிதாபப்படாமல், இவர்களது தன்னம்பிக்கையை கருத்தில் கொண்டாவது இவர்களுக்கு அரசும், வங்கிகளும் உதவலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x