Published : 30 Jun 2017 09:35 AM
Last Updated : 30 Jun 2017 09:35 AM

பகலில் நூலகம்.. இரவில் பயிலகம்..!

அண்மைக் காலமாக அனைத்து மட்டத்திலும் வாசிப்புப் பழக்கம் அதிகரித்துவரும் நிலையில், கோவை மாவட்டம் கோவை புதூரில் உள்ள அரசு நூலகம் வாசிப்புக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறது.

ஆம், பகலில் இந்நூலகம் சராசரி வாசக சாலை யாகவும், இரவில் கல்லூரி மாணவர்கள் அரசு பணிக்கான தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தும் பயிலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்ல, நூலக இலக்கிய மன்றம், நூலக கல்வியறிவு சேவை மையம், மாணவர் நூலக மன்றம், மகளிர் நூலக மன்றம் என பல்வேறு அமைப்புகளாகவும் செயல்பட்டு கலவையான வாசகர்களை ஒருங்கிணைக்கிறது இந்த நூலகம்.

ஒற்றை அறை நூலகம்

இது எப்படி சாத்தியமானது? விளக்குகிறார் இதன் நூலகர் பி.விஜயன். ‘‘இதற்கு முன்பு நான் பணி யாற்றிய ராமநாதபுரம், பொள்ளாச்சி நூலகங்களில் அங்குள்ள மக்களை ஒருங்கிணைத்து பயனுள்ள பல சீர்த்திருத்தங்களைச் செய்தேன். 2014-ல் இங்கு மாறுதலாகி வந்தபோது ஒரே ஒரு அறையில் நூலகம் இருந்தது. இன்னொரு அறையை மாநகராட்சி செயற்பொறியாளர் அலுவலகமா வெச்சிருந்தாங்க. அதனால, நூலகத்துக்கு வர்றவங்க மரத்தடியில உட்கார்ந்துதான் படிக்கணும். புத்தகங்களையும் மொத்தமா கட்டிப் போட்டிருந்தாங்க.

இது விஷயமா மாநகராட்சி செயற் பொறியாளர்கிட்ட பக்குவமா பேசுனோம். நூலகத்தின் அவசியத்தையும் தேவைகளையும் புரிஞ்சுக்கிட்டவங்க, மூணே மாசத்துல வேற கட்டிடத்துக்கு மாறிக்கிட்டாங்க. போறப்ப சில சேர்களையும் குடுத்துட்டுப் போனாங்க. அங்கிருந்த அலுவலர்கள் ரெண்டு பேர், தலைக்கு ஆயிரம் ரூபாய் கட்டி நூலகத்தின் புரவலராவும் சேர்ந்தாங்க. இதுக்கப்புறம், நூலகத்துக்கு கூடுதலா இன்னொரு அறை கிடைச்சதால புத்தகங்கள முறையா அடுக்க முடிஞ்சுது; நிறையப் பேர் நூலகத்துக்கு வரவும் ஆரம்பிச்சாங்க.’’ என்கிறார் விஜயன்

நூலகம் புதுப்பொழிவு பெற்றதும் அதன் வாசகர் வட்டத்தில் 17 பேர் புரவலர்கள் ஆனார்கள். பள்ளி களுக்குச் சென்று ‘எனது நூலகம் எனது பங்கு’ என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தது வாசகர் வட்டம். இதையடுத்து, நூலகத்தை நோக்கி பள்ளிக் கல்லூரி மாணவர்களும் வர ஆரம்பித்தனர்.

தனி அலமாரிகள்

அடுத்து நடந்த மாற்றத்தையும் விவரித்தார் விஜயன். ‘‘இங்கு வரும் கல்லூரி மாணவர்களில் பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான தரவுகளை பெறுவதற் காகவே வருகிறார்கள் என்பது அவர்களிடம் பேசிப் பார்த்ததில் புரிந்தது. இதையடுத்து, அப்படியான தேடல் உள்ள மாணவர்களுக்காகவே புத்தகங்களை தனியாக வகைப்படுத்தி அலமாரிகள் வைத்தோம்.

புரவலர்களின் உதவியோடு, கூடுதல் புத்தகங் களையும் வாங்கி அடுக்கினோம். இப்படி இதுவரை, போட்டித் தேர்வுகளுக்காக மட்டுமே 2.5 லட்சம் ரூபாய்க்கு 200 புத்தகங்களை வாங்கி இருக்கிறோம். புத்தகங்களை வாங்கிவைத்ததோடு நின்றுவிடாமல் அவற்றை மாணவர்கள் சரியானபடி பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தோம்.

பயிற்சி வகுப்புகள்

பாரதியார் பல்கலையில் இயங்கி வரும் அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி வகுப்பெடுக்கும் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஒருவர் இங்கு வரும் மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல், வகுப்பெடுக்க சம்மதித்தார். எங்கள் நூலகத்தின் வாசகரான புவியியல்துறை பேராசிரியர் ஒருவரும் இதுபோல முன்வந்தார். இப்படி சேவையுள்ளம் கொண்டவர்கள் எல்லாம் கைகூடித்தான் இங்கு இந்தப் பயிற்சி மையத்தை உருவாக்கினார்கள்.’’ என்கிறார் விஜயன்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கல்லூரி மாணவர்களிடம் பேசியபோது, ‘‘இங்கே நாங்க படிக்கிறதுக்காகவே தனி டேபிள், தனி அறை ஒதுக்கியிருக்காங்க. இரவில் குழு விவாதத்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க. இப்ப 52 பேர் வரைக்கும் இங்கே பயிற்சி எடுத்துட்டு இருக்கோம். படிக்கும்போதே அரசு வேலைக்கு தயாராகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கும் நூலகர் விஜயனுக்கு, ‘சிறந்த நூலகர்’ விருது குடுத்தாங்க. அதுக்காக கிடைத்த சிறு தொகையைக்கூட நூலகத்துக்கு புத்தகம் வாங்கவே குடுத்துட்டார்’’ என்று நன்றிப் பெருக்குடன் சொன்னார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x