Last Updated : 29 Oct, 2013 11:38 AM

 

Published : 29 Oct 2013 11:38 AM
Last Updated : 29 Oct 2013 11:38 AM

செயற்கைக்கோளுக்கு ஏன் தேங்காய் பூஜை?

ஊர்ப் பக்கத்தில் பொருள்களைத் தொலைத்தவர்கள் குறிசொல்பவர்களைத் தேடிச் செல்வார்கள். பொருள்களைத் தொலைத்ததைத் தவிர, குறிசொல்பவனிடமும் பணத்தைத் தொலைத்துவிட்டு, கையைப் பிசைந்து நிற்கும் நூற்றுக் கணக்கானோர் கதைகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம்.

தனிமனிதர்கள் இப்படிச் செய்தால் பரிதாபப்படலாம்; ஓர் அரசாங்கமே செய்தால் என்ன செய்வது? உத்தரப் பிரதேசத்தில் நம்முடைய தொல்லியல் துறை நடத்தும் தங்க வேட்டை அப்படித்தான் இருக்கிறது.

ஷோபன் சர்க்கார் என்ற சாமியார், “மன்னர் ராஜாராவ் ராம்பக்ஸ் சிங் என் கனவில் தோன்றினார். தம் கோட்டையில் 1,000 டன் தங்கத்தைப் புதைத்துவைத்துள்ளதாகக் கூறினார்” என்று மத்திய அமைச்சர் சரண் தாஸிடம் சொல்ல, நம்முடைய தொல்லியல் துறையினர் தங்கத்தைத் தேடி அங்கே பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.

மூடநம்பிக்கை மட்டுமே காரணமா?

இதற்கெல்லாம் மூடநம்பிக்கைகளே காரணம் எனச் சொல்லி ஒரே வரியில் ஒதுக்கிவிட முடியாது. அறிவியலிலும் அறிவியல் தொழில்நுட்பத்திலும் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், இந்தியச் சமூகம், அறிவியல் மனப்பான்மையில் இன்னமும் பின்தங்கியிருப்பதே காரணம்.

நாம் அறிவியல் அறிவில் முன்னேறியிருக்கிறோம். சரி... அறிவியல் மனப்பான்மையைப் பெற்றிருக்கிறோமா? ஏனென்றால், இரண்டும் வேறு வேறு. எந்த ஒரு நிகழ்வையும் உணர்ச்சிகள் அல்லது நம்பிக்கை அடிப்படையில் அல்லாமல், நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வாயிலாகப் பார்ப்பதே அறிவியல் மனப்பான்மை. பொதுவாக, நம் சமூகத்தில் அறிவியல் மனப்பான்மை குறைவு என்றே தோன்றுகிறது.

விண்வெளி அறிவியலில் இந்தியா வியத்தகு முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது. ‘இஸ்ரோ’ஏவும் ஒவ்வொரு செயற்கைக்கோளும் இதற்கான சான்று. ஆனால், செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு முந்தைய நாள் இஸ்ரோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் திருப்பதி அல்லது காளஹஸ்திக்குச் செல்வதும், ஏவப்படவுள்ள செயற்கைக்கோளின் மாதிரியை வைத்து பூஜை செய்வதும் எதனுடைய முன்னேற்றத்துக்குச் சான்று? ‘இஸ்ரோ’அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் கோயில் செல்வதும் வழிபடுவதும் அவர்கள் உரிமை. ஆனால், செயற்கைக்கோள் மாதிரிக்குத் தேங்காய் உடைத்து பூஜை செய்வதை உரிமை என்று சொல்ல முடியாது அல்லவா? கோடிக் கணக்கான மக்களுக்கு இத்தகைய செய்திகள் சென்றடையும்போது, சமூகத்தில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

சட்டம் சொல்வதென்ன?

நாட்டின் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள்குறித்து வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51-வது பிரிவு, “மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கப் பாடுபடுவதும் பிரதான கடமை” எனக் கூறுகிறது. ஆனால், அது பாடத்திட்டங்களில்கூட இன்னும் தொடங்கவில்லை. குறைந்தபட்சம், அதுகுறித்து நாம் இன்னும் யோசிக்கக்கூடத் தொடங்கவில்லை. அதன் விளைவைத்தான் சாமியார்களின் கனவை நம்பித் தங்கம் தேடுவோரிடம் பார்க்கிறோம்!

வி. தேவதாசன் - தொடர்புக்கு: devadasan1973@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x