Last Updated : 22 Oct, 2013 03:33 PM

 

Published : 22 Oct 2013 03:33 PM
Last Updated : 22 Oct 2013 03:33 PM

பங்காளிகள் என்ன சொல்கிறார்கள்?

சமீப காலமாக உச்ச நீதிமன்றம், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்தியப் புலனாய்வு அமைப்பு உபயத்தில் அனில் அம்பானி, சுனில் மிட்டல், ரவி மற்றும் அன்ஷுமன் ருயா, நவீன் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், சஞ்சய் சந்திரா, குமார்மங்கலம் பிர்லா என்று பெருநிறுவன முதலாளிகளின் பட்டாளமே ஊழல் - முறைகேடு விசாரணைகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

மக்களாகிய நமக்கு இது களிப்பையும் உவப்பையும் அளிக்கலாம். சரி, நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் என்ன நினைக்கிறார்கள்?

உள்ளது உள்ளபடி:

“இந்தியா ஔரங்கசீப்பின் ஆட்சியில் இல்லை. இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவுக்குச் சென்று முதலீடுசெய்ய முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள். அங்குதான் பெரும் பணக்காரர்கள் சிறைகளில் அடைக்கப்படுவது வழக்கம். ரஷ்யாவைப் போல இந்தியா மாறிவிடாமல் இருப்பதை நீதித் துறையும் புலனாய்வு அமைப்புகளும் உறுதிசெய்ய வேண்டும்” - அமைச்சர் வீரப்ப மொய்லி.

“ஒரு மகத்தான தொழிலதிபர் மீது எப்படி வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது என்பதை யோசித்துப்பார்க்கவே முடியவில்லை. முதலில் தகவல் தொழில்நுட்பத் துறை, அடுத்து எரிசக்தித் துறை, இப்போது நிலக்கரித் துறை என்று வரிசையாகக் கொலை நடக்கிறது.”

“பெருநிறுவன அதிபர்களை அரசு மதிக்கிறது. அவர்களின் நேர்மை குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது” - ஆனந்த ஷர்மா.

“லாபம் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்பட்ட முற்காலத்தை நோக்கி நம் கடிகாரங்களை நாம் சாவிகொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்” - அமைச்சர் மணீஷ் திவாரி.

“முதலீட்டு நம்பிக்கைகளை நாசமாக்குகின்றன சமீபத்திய சம்பவங்கள்” - அமைச்சர் சச்சின் பைலட்.

“இன்னமும்கூடக் கொள்கை முடிவுகளுக்கும் ஊழல்களுக்கும் வித்தியாசமே தெரியாமல்தான் இருக்கிறோம் நாம். ஒரு அருமையான கொள்கை முடிவு என்பது மோசமான ஊழலாக இருக்கலாம்; ஒரு மோசமான கொள்கை முடிவு ஊழலற்றதாக இருக்கலாம்.”

“இந்த மாதிரி சர்ச்சைகளில் மதிப்புமிக்கவர்களின் பெயர்கள் அடிபடுவதில் எனக்கு உடன்பாடே இல்லை” - மிலிந்த் தியோரா.

“இது முதலீட்டாளர்கள் மத்தியில் மோசமான ஒரு சமிக்ஞையை அனுப்பப்போகிறது. குமார் மங்கலம் பிர்லா ஓர் அனுபவமிக்க தொழிலதிபர். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்துள்ளது தவறான சமிக்ஞை. இதன் ஒட்டுமொத்த விளைவாக, வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துபோவதோடு, உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாடுகளை நோக்கிச் சென்றுவிடுவார்கள். இது முதலீடுகளுக்கு உகந்த சூழல் அல்ல”

- மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஜேட்லி.

இதுதான் இன்றைய இந்தியா.

'என்ன மாதிரியான நாட்டில் வாழ்கிறோம் நாம்?'

சமஸ் - தொடர்புக்கு: writersamas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x