

கொடையாளிகள் உதவியுடன் ஒவ்வோர் ஆண்டும் ஓர் அரசுப்பள்ளி மாணவருக்கு ரஷ்யா சென்று விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி.
தமிழகத்தின் கடைக்கோடி மூலையில் இருக்கும் கிராமத்து அரசுப்பள்ளி மாணவர், ரஷ்யாவின் தலைநகரில் உள்ள விண்வெளி நிலையத்துக்குச் சென்று ஆராய்ச்சியை மேற்கொள்ளப்போகிற இமாலய சாதனையின் ஆணிவேராக இருந்திருக்கிறது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு.
சிவகாசி அருகே நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், வெடிவிபத்தைத் தடுக்கும் தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கி இருந்தார். இந்த செயல்திட்டத்தைப் பாராட்டி, இந்திய இளம் விஞ்ஞானி விருதை வழங்கிய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அவருக்கு ரஷ்யா செல்லும் வாய்ப்பையும் வழங்கியிருந்தது.
இதுகுறித்துத் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் அவ்வமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன்.
அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து சர்வதேச அளவிலான புரிதலை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா.
இந்திய மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறோம்.
குறிப்பாக விண்வெளி அறிவியியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, 'இந்திய இளம் விஞ்ஞானி' விருதை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிக்கு நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1200 மாணவ மாணவிகள் விண்ணப்பித்தனர்.
அதில் இருந்து 170 பேரின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஜம்மு, பிஹார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டனர். தங்களின் வடிவமைப்பில் உருவான பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த வல்லுனர்களைக் கொண்டு மூவரைத் தேர்ந்தெடுத்தோம்.
அதில் இரண்டாவதாக வந்தவர்தான் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார். முதலிடம் பிடிப்பவரை நாங்களே இலவசமாக ரஷ்யா அழைத்துச் செல்கிறோம். அதற்கடுத்த இடம்பிடிப்பவர்களுக்கும் நிதி உதவி செய்ய ஆசை. ஆனால் இன்னும் பொருளாதார ரீதியில் நாங்கள் முன்னேற வேண்டியுள்ளது.
10-வது பயிலும் மாணவர் ஜெயக்குமார்
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசுப்பள்ளி மாணவர் ஒருவரை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பாக அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறோம். அதற்கான கட்டணத் தொகையை ஒருவர் ஏற்க முன்வந்தால், இதைச் சாத்தியமாக்க முடியும்.
இதனால் அந்த மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வம் தூண்டப்படும். அவர்களிடத்தில் ஆராய்ச்சிக்கான தீப்பொறியை ஏற்படுத்தலாம். அரசுப்பள்ளி மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாதா என்ன? இவை அனைத்துக்கும் இந்த ரஷ்யப் பயிற்சி உதவிகரமாக இருக்கும்.
இதன்மூலம் பெற்றோர்களுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இதைப் பார்த்தாவது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். குழந்தைகளை வகுப்பறை என்னும் நான்கு சுவருக்குள் அடைத்துவிடாமல், அவர்கள் திறமைக்கு வானமே எல்லை என்பதை புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீமதி.