Published : 28 Jan 2014 07:08 PM
Last Updated : 28 Jan 2014 07:08 PM

திருப்பூர்: கூலிகளை சோதனைக்குள்ளாக்கும் கூளிபாளையம் ரயில் நிலையம்!

ரயில் நிலையம் இருக்கிறது. ஆனால், மக்களுக்கு பயன் இன்றி.. கடந்த 120 ஆண்டுகளாக நின்று சென்ற பயணிகள் ரயில்கள், கடந்த சில நாட்களாக நிற்காமல் செல்வதால் பொதுமக்களோடு, மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூலிபாளையம் பகுதி மக்களுக்குத்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ரயில் பாதை போட்ட காலத்திலிருந்து நின்று சென்ற ரயில்கள், கடந்த ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து ரயில் நிறுத்தம் சேவை ரத்து செய்யப்பட்டதால் அப்பகுதியினர் மிகவும் நொந்து போயுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயக் கூலிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலருக்கும் அன்றாடம் பயன்பட்ட ரயில் நிலையம் தற்போது

வெறிச்சோடி யாருக்கும் பயனற்று கிடப்பதுதான் பெரும் வேதனை. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம் என்று கூறி ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போராட்டக் குழு தலைவர் பழனிச்சாமி கூறியது:

கடந்த 120 ஆண்டுகளாக கூலி பாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று சென்றன. இதனால், கூலிபாளையம், கூலிபாளையம் ஆர்.எஸ், நஞ்சராயன் நகர், வாவிபாளையம், குருவாயூரப்பன் நகர், கூலிபாளையம் நால்ரோடு, நெருப்பெரிச்சல், என சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு போக்குவரத்திற்கும் தொழிலுக்கும் மிகவும் பயன்பட்டு வந்தது. இப்பகுதி மக்கள் அனைவரும் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் செல்வதற்காக இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். முதலிபாளையம் சிட்கோவிற்கு செல்பவர்களும் பயன்படுத்தி வந்த பிரதான ரயில் நிலையத்தில் தற்போது ரயில்கள் நிற்காமல் செல்வது எங்களின் வேதனையை அதிகப்படுத்தியுள்ளது.

கோவைக்கு பஸ்ஸில் செல்வதென்றால் 3 மணி நேரத்திற்கும் அதிகமாகிவிடும். கட்டணமும் பலமடங்கு செலுத்த வேண்டியுள்ளது. குழந்தைகளோடு பேருந்தில் செல்வதென்றால் செலவு அதிகம். அதுவே ரயிலில் பயணம் செய்தால் செலவு மிகவும் குறையும். வேலைக்கு செல்பவர்கள், வெளியூர்களில் கல்லூரியில் படிப்பவர்கள் அன்றாட பயன்பாட்டிற்கு பேருந்து பயன்பாடு பொருந்தாத ஒன்றாக உள்ளது.

முன்பு, கூலிபாளையத்தில் 6 வேளை நின்ற ரயில்கள் 2 ஆக குறைக்கப்பட்டன. காலை 7.50 க்கு இரவு 7.45க்கும் நின்று சென்ற அந்த 2 ரயில்கள் தற்போது நிறுத்தப்பட்டிருப்பது தான் பெருங்கொடுமை. எங்களுக்கு மீண்டும் கூலிபாளையத்தில் ரயில் நிறுத்தத்தை ஏற்பாடு செய்து தரவில்லையென்றால், ரயில் பயன்பாட்டை நம்பியுள்ள 6 ஆயிரம் குடும்பங்களும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம். அனைத்துக் கட்சி மற்றும், பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்துள்ளோம்.

எங்களுக்கு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்து நாடாளு மன்ற தேர்தலை புறக்கணிப்பது நிச்சயம் என்கின்றனர் அப் பகுதி மக்கள். இப் பிரச்சினை குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சூபிரான்சுவிடம் பேசினோம். நான் பதவியேற்று 2 நாள் தான் ஆகிறது. எனக்கு அந்த பிரச்சினைப் பற்றி எதுவும் தெரியாது என்றார்.

திடீரென ரயில்கள் நிறுத்தப்படாததால் மக்கள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக்யுள்ளனர். வழக்கம்போல் கூலிபாளையத்தில் ரயில் நின்றுசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம். மாவட்ட நிர்வாகமும் இதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று வேண்டுகின்றனர் பொதுமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x