

பலரும் வியக்கும் வண்ணம் தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடுகொடுக்க உருமாறிக் கொண்டிருக்கிறது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. நோயாளிகள், பார்வையாளர்களை ஓரமாக நடக்க வைக்கும் காவலர்கள். கடை கோடியில் இரு இடங்களில் பார்க்கிங் என புதிய கட்டடங்கள் உருவாவதற்கு முன்பே ஜமாய்த்துக் கொண்டிருக்கிறது மருத்துவமனை வளாகம்.
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் என பல்வேறு மாவட்ட மக்களின் நோய் தீர்க்கும் மருத்துவமனை இது. இதன் இப்போதைய வயது 104. தினமும் உள்நோயாளிகளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், வெளி நோயாளிகளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த பல மாதங்களுக்கு முன், சிதிலமடைந்த கட்டிடங்கள், சாக்கடை தேங்கி துர்நாற்றம், கண்ட இடங்களிலும் எச்சில், சிறுநீர் கழிப்பு, எப்போதும் தாறுமாறாக மக்கள் நடமாட்டம் என்பது போன்ற அவலங்கள் அன்றாட நிகழ்வாக இருந்தன.
இந்நிலையில், சிதிலமடைந்த கட்டிடங்கள், சுகாதாரத்தைப் பேண என பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு, கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. 3 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 மாடிகளுடன் மிகப் பிரம்மாண்டமாக மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மகப்பேறு பிரிவுக்காக ரூ.6 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டு முழுமையாக முடிவடைந்துவிட்டது. நர்சுகள் தங்கும் அறை ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புற்றுநோய் வார்டு மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டிய உபகரணங்கள் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிணப் பரிசோதனை அறை கட்ட ரூ.5 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.
நித்தம் நித்தம் மருத்துவ மனையில் நோயாளிகள் செய்யும் அசுத்தங்களையும் ஒழுங்குக்கு கொண்டுவந்துள்ளது நிர்வாகம். நுழைவு வாயிலில் துவங்கி, கடைகோடி வரை ஒழுங்குபடுத்த தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடக்க தடுப்புகள் போடப்பட்டுள்ளன. முகப்பை நுழைவு வாயிலாகவும், பின்பக்கத்தை வெளிவாயிலாகவும் மாற்றி, வாகன ஓட்டிகளுக்கு ஒருவழிப்பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்த செக்யூரிட்டி பாதுகாப்புடன் இலவச பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் நேரத்தில், மருத்துவமனை வளாகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக சுகாதாரம், தூய்மை போன்ற அனைத்து வசதிகளும் ஏழை நோயாளிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் கிடைக்கும் என்பது நிதர்சன உண்மையாகப் போகிறது என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகிகள். எதிர்பார்ப்போம் நம்பிக்கையுடன்!