

21 ஆண்டுகளாக நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கின் போக்கை மாற்றியவர்களில் முக்கியமானவர் ஆச்சார்யா. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞராக ஆஜரானவர். இவ்வழக்கில் இறுதிவரை உறுதியாக நின்று வெற்றி பெற்றிருக்கும் ஆச்சார்யாவை பெங்களூருவில் சந்தித்துப் பேசினேன்.
1. எப்படி உணர்கிறீர்கள்?
இந்த நிமிடம் எனது மனதில் இருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விடுதலை கிடைத்ததைப் போல உணர்கிறேன். இவ்வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 21 ஆண்டுகளாகப் பயணித்திருக்கிறது. பிரபலமான அரசியல்வாதிகள், பெரிய வழக்கறிஞர்கள், நூற்றுக்கணக்கான சாட்சியங்கள், ஆயிரக்கணக்கான சான்றுகள், லட்சக்கணக்கான ஆவணங்கள் என இந்த வழக்கு மிகப் பெரிதாக உருவெடுத்திருந்தது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த விசாரணை, குறுக்கு விசாரணை, இறுதிவாதம் என நீண்ட இவ்வழக்கில், இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ் வழக்கில் இடைவிடாமல் பணியாற்றினேன். உண்மையான உழைப்புக்குப் பலன் கிடைத் திருக்கிறது. இது இந்திய நீதித் துறைக்குக் கிடைத்த வெற்றி!
2. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டு, வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவரான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே?
நான் இன்னும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை முழுமையாகப் படிக்கவில்லை. வழக்கறிஞர் என்ற முறையில் ஒரு நீதிபதியின் தீர்ப்பை விமர்சிப்பதை விரும்பவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு வயதும், அனுபவமும், பெரிய பொறுப்பும் தேவைப்படாது.
3. சசிகலா தரப்பு இனிமேல் முறையீடோ, சீராய்வு மனுவோ தாக்கல் செய்ய முடியாதா? சசிகலாவின் முதல்வர் கனவு?
என்னைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. தேவைப்பட்டால் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம். அதில் எதிர்த் தரப்புக்கு எந்த வகையில் வெற்றிவாய்ப்பு இருக்கும் என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவுசெய்ய முடியும். இப்போதைய தீர்ப்பின்படி குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சசிகலா முதல்வராக முடியாது.
4. ஒருவேளை ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இந்த வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருக்கும் என்கிறார்களே?
அதெல்லாம் கற்பனை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதுதான் நீதிபதி குன்ஹா அவருக்குத் தண்டனை வழங்கினார். சாட்சிகளும், ஆதாரங்களும்தான் தீர்ப்பைத் தீர்மானிக்கின்றன என நான் நம்புகிறேன்.
5. சொத்துக்குவிப்பு வழக்கு முடிந்துவிட்டது. “இவ்வழக்கில் ஆஜராகக் கூடாது'' என உங்களை மிரட்டியது யார் என இப்போதாவது சொல்லுங்கள்?
''ஹா..ஹா” (சத்தமாகச் சிரிக்கிறார்). என்னை வழக்கில் இருந்து விலகுமாறு அப்போதைய பாஜக மேலிடம் நிர்பந்தித்தது. ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தொலைபேசி, கடிதம் மூலமாக மிரட்டினர். இதையெல்லாம் எனது நூலில் எழுதி இருக்கிறேன். ஆனால் யார் பெயரையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன்!
- இரா.வினோத், தொடர்புக்கு: vinoth.r@thehindutamil.co.in