

குழந்தைகளைப் பாதிக்கும் முதல் நிலை நீரிழிவு நோய்க்கு (டைப்-1) கடந்த 15 வருடங்களாக இலவச இன்சுலின் வழங்கி மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரண மாநிலமாகத் திகழ்கிறது தமிழகம்.
நீரிழிவு நோயில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு நிலைகள் உள்ளன. இதில் முதல் நிலை என்பது ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயாகும். இவர்களுக்குப் பிறவியில் இருந்தே இன்சுலின் சுரக்காது. எனவே, அவர்களின் வாழ்க்கை முழுவதும் ஒரு நாள் கூட விடாமல் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சந்தையில் ஒரு டோஸ் இன்சுலின் மருந்து ரூ.150க்கும் மேல் விற்கப்படுகிறது. இதனைச் சாமானிய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு 1998-ம் ஆண்டு அரசாணை ஒன்றின் மூலமாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் முதல் நிலை நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் இலவச இன்சுலின் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் கடந்த 15 ஆண்டுகளாகப் பலர் பலனடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நீரிழிவு நோய்த் துறையைச் சார்ந்த மருத்துவர் மற்றும் பேராசிரியர் தர்மராஜன் 'தி இந்து'விடம் கூறியதாவது:
தமிழகத்தின் தான் முதன்முறையாக முதல் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச இன்சுலின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை இலவசமாக இன்சுலின் வழங்கி வரும் ஒரே மாநிலமும் இதுதான். மாநிலம் முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட முதல் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச இன்சுலின் வழங்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் தினமும் 400 முதல் நிலை நீரிழிவு நோயாளிகள் இலவச இன்சுலின் மருந்தைப் பெற்று வருகிறார்கள். தற்போது இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த முயன்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.