

அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் புனிதத் தலமான வைத்தீஸ்வரன்கோயில் தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.
நவக்கிரக தலங்களில் இது செவ்வாய்க்கான தலம். இறைவனே மருத்துவராக… வைத்தீஸ்வரராக இருப்பதால் அவரை வழிபடுவதற்காக இங்கு வந்து போகும் மக்கள் மிக அதிகம். குலதெய்வம் இல்லாதவர்களின் குலதெய்வக் கோயில் இது. நாடி ஜோதிடம் பார்க்க இதுதான் தலைமையிடம் என அதனை விரும்புவோர் நினைப்பதால் அதற்காகவும் கூட்டம் அலைமோதுகிறது.
போக்குவரத்து நெருக்கடி…
இப்படி வரும் மக்களை எதிர்பார்த்து இருக்கும் உள்ளூர் மக்களால் வைத்தீஸ்வரன்கோயில் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதன் காரணமாக எங்கும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
உதாரணமாக கீழ வீதி. கோயிலுக்கு வரும் அத்தனை சுற்றுலா வாகனங்களும் இங்குதான் நிறுத்தப்படுகின்றன. பேருந்து நிறுத்தமும் இங்குதான் இருக்கிறது. கார்களில் கோயிலுக்கு வருகிறவர்களும் இந்த வழியாகத்தான் உள்ளே நுழைகிறார்கள். அதனால் அவர்களை எதிர்பார்த்து தேங்காய், பழம் விற்கும் கடைகள் சாலையின் கிழக்குப் பகுதி முழுவதும் வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த பக்கம் வாகனங்களை ஓரம்கட்டி நிறுத்த முடியாது.
சாலையின் மையத்திலேயே பேருந்துகள் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்கின்றன. சாலையின் மேற்குப் பகுதி ஓரத்திலும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்.
சாலையைக் கபளீகரம் செய்யும் கொட்டகைகள்…
கோயில் நுழைவாயிலின் இருபுறமும் உணவகங்களும் நாடி ஜோதிட மையங்களும் தங்கள் கட்டிடங்களை விட்டு சுமார் பத்தடிக்கும் மேல் வெளியே கொட்டகைகளை நீட்டி சாலையைக் கபளீகரம் செய்திருக்கின்றன. அதனால் அந்தப் பக்கமும் இடமில்லை.
இதனால் பேருந்துகளுக்கும் சிரமம், கோயிலுக்கு வருகிற பக்தர்களுக்கும் சிரமம். தங்கள் வாகனங்களை நிறுத்தக் கூட இடமில்லாமல் தவிக்கிறார்கள் வெளியூரில் இருந்து வருகிறவர்கள்.
அடுத்ததாக தெற்கு வீதி. இதில் பெரும்பாலும் வாடகை வாகனங்களின் ஓட்டுனர்கள் முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். வாகன ஓட்டுனர்களின் நிலையமாகவே சாலை ஓரங்கள் இருக்கின்றன. இங்குள்ள திருமண மண்டபங்களில் சரியான வாகன நிறுத்தங்கள் இல்லாததால் திருமணத்திற்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் அந்த சாலையை கடப்பதற்குள் மூச்சு முட்டிவிடும்.
40 அடியாகக் குறுகிய 100 அடிச்சாலை…
அதேபோலத்தான் மேல வீதியிலும் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டிருக்கிறது. இருபுறமும் உள்ள கடைக்காரர்கள், நாடிஜோதிட அலுவலகங்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு பத்தடிக்கும் மேல் வெளியே பந்தல்களை நீட்டியிருக்கிறார்கள். அதனால் 100 அடிக்கும் மேல் அகலமாக இருக்க வேண்டிய வீதி 40 அடி கூட இல்லாமல் குறுகிப் போயிருக்கிறது. இந்த வீதியிலும் தெற்கு வீதியிலும் அதிகம் இருக்கும் திருமண மண்டபங்களால் இன்னொரு அவதியும் இருக்கிறது. அவற்றின் கழிவுநீர் வெளியேற சரியானபடி வசதிகள் செய்யப்படாமல் அது பல இன்னல்களை நகர்வாசிகளுக்குத் தந்து கொண்டிருக்கிறது.
இப்படி ஆக்கிரமிப்புகள் செய்வது பற்றி அந்த மக்கள் பயம் கொள்ளவில்லை. காரணம் அது தவறு என்று அவர்களுக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை. அதற்கான தண்டனையும் இதுவரை தரப்படவில்லை.
வேலி தாண்டிய வியாபாரிகள்…
கீழ வீதியில் உள்ள தேங்காய், பழக்கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத் துறையால் ஒருமுறை அகற்றப்பட்டு அந்த இடம் முழுவதும் கம்பிவேலி போடப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களோ கவலையே படாமல் கம்பிவேலிக்கு வெளியே கொண்டுவந்து கடையைப் போட்டு விட்டார்கள். அதனால் இடம் இன்னும் குறுகலாகப் போய் விட்டது.
பேரூராட்சி நிர்வாகமோ இதைப் பற்றிக் கவலை கொள்ளவேயில்லை. அவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஓட்டுக்கள் மட்டும் கண்முன் நிற்கிறதே தவிர வெளியூர் மக்களின் அவதிகள் எதுவும் பார்வையில் படுவதேயில்லை.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டதற்கு “எத்தனை முறை ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் அடுத்தநாள் திரும்பவும் வந்து விடுகிறார்கள். அவர்களிடம் பலமுறை பேசியும் பார்த்தாகிவிட்டது. ஆனாலும் பலனில்லை. இருந்தாலும் இன்னொருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்கள். பொதுவாக இதுபோன்ற முக்கிய தலங்களுக்கு பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் சௌகரியமாக சுற்றிப் பார்க்கும் வகையில் பெரிதாக வசதியேதும் செய்து தராத நிலையில், ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் உள்ள கோயிலின் மகத்துவத்தை உணர்ந்து, வியப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். அவர்கள் வியந்து பாராட்டினால்தான் மேலும் மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையும் அதிரடியாய் இருக்க வேண்டும், மக்களின் நடத்தையும் மாறவேண்டும். அதுதான் வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் பெருமை தருவதாக அமையும் என்கிறார்கள் பக்தர்கள்.