

உதகையில் அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ள நிலையில், பள்ளங்களில் சிமெண்ட் கலவைகளை கொண்டு மூடும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. தரமில்லாத மராமத்து பணிகளால் மீண்டும் ஆளை விழுங்கும் பள்ளங்கள் ஏற்பட்டு பயணிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பள்ளங்களில் தவறி விழுந்து தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர். சில நேரங்களில் பள்ளங்களை தவிர்த்து செல்ல முயற்சிக்கும்போது எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது.
இச் சாலைகளில் உள்ள குழிகளை மூட வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
ரூ.8 லட்சத்தில் மராமத்து பணி
பொதுமக்களின் நலன் கருதி உதகை நகருக்குள் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள பள்ளங்களை தற்காலிகமாக மூடி சீரமைக்கும் பணியில் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர். சுதாரித்துக் கொண்ட நகராட்சி நிர்வாகம், உதகை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடும் பணியில் ஈடுபட்டது.
குறிப்பாக, எட்டின்ஸ் சாலையில் ஏற்பட்டிருந்த பெரிய பள்ளங்களை மூடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கான்கீரிட் கலவைகள் கொண்டு மூடப்பட்டன.
தரமற்ற பணியால் மீண்டும் பழுது
பணிகளை தரமாக மேற்கொள்ளாத நிலையில், பெரிய அளவிலான ஜல்லி கற்கள் அனைத்தும், சாலை சீரமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாலை முழுவதும் பரவி வீணானது. எட்டின்ஸ் சாலை மட்டுமின்றி பெரும்பாலான சாலைகளில் செல்லும் இரு சக்கர ஓட்டிகள் பள்ளங்களில் தவறி விழுந்தை விட, தரமில்லாமல் போடப்பட்ட மராமத்தால், சாலையில் பரவிக் கிடக்கும் கற்களில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இந் நிலையில், தரமில்லாமல் போடப்பட்ட பேட்ச் ஒர்க் பழுதாகி, தற்போது உதகையில் உள்ள முக்கிய சாலைகளில் மீண்டும் பெரிய அளவிலான ஆளை விழுங்கும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, உதகை நகர சாலைகளில் ‘பேட்ச் ஒர்க்’ என்ற பெயரில், தரமில்லாத மராமத்துப் பணிகளை மேற்கொண்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பழுது நீக்க நகராட்சி உறுதி
இது குறித்து நகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் கேட்ட போது, எட்டின்ஸ் சாலை மற்றும் பிற சாலைகளை பழுது பார்க்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் பணியில் சேர்ந்ததும் பணிகள் துவங்கும். எட்டின்ஸ் சாலைக்கு தனியாகவும், பிற சாலைகளுக்கு தனியாகவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மராமத்து பணியை தரமில்லாமல் ஒப்பந்ததாரர் செய்துள்ளார். குழிகளில் ஜல்லி கற்கள் மற்றும் கிரஷர் தூளை போட்டதால் பழுதடைந்து விட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.