Last Updated : 20 Apr, 2017 09:53 AM

 

Published : 20 Apr 2017 09:53 AM
Last Updated : 20 Apr 2017 09:53 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: அதிமுக இன்னும் நூறாண்டுகள் நிலைத்திருக்கும்!- வைகைச் செல்வன்

அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது அக்கட்சியினருக்கே முழுமையாகப் புரியவில்லை. ஒரு தெளிவுக்காக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வனிடம் பேசினேன். அங்கே சகலமும் மாறிவிட்டதைத் தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் வைகைச்செல்வன்.

கட்சிக்குள் என் பலத்தைக் காட்ட விரும்பவில்லை.. நான் ஒதுங்கிக்கொள்கிறேன்’ என்று டிடிவி.தினகரன் சொல்லியிருக்கிறாரே?

அவரே அந்தப் பேட்டியில் குறிப்பிட்டதுபோல, அது அவருடைய முதிர்ச்சியைக் காட்டுகிறது. தனக்குப் பதவிகளில் பற்றில்லை என்று முன்பு சொன்னவர், அதைத் தற்போது நிரூபித்திருக்கிறார். எந்தச் சூழலிலும் தனிநபர்களைவிட அமைப்பு முக்கியமானது. அமைப்புரீதியிலான கட்டுமானம் கொண்ட ஒரு இயக்கம் சூழலுக்குத் தகுந்தாற்போலத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிற ஆற்றல் பெற்றது. அது தனி நபர்களின் துக்கத்தையோ, கண்ணீரையோ கணக்கில் கொள்வதில்லை.

இதே எதிர்ப்பு சசிகலா பொறுப்பேற்றபோதே இருந்தது. ஆனால், அப்போது அமைதியாக இருந்த அமைச்சர்கள் இப்போது திடீரென அவர்களை வெளியேறச் சொன்னது எதனால்?

ஒரு சிக்கலுக்குத் தீர்வு ஒன்றை முன் வைக்கும்போது, அந்தத் தீர்வே சிக்கலாக மாறினால் என்ன குழப்பங்கள் நிகழுமோ, அதுதான் கடந்த இரண்டு மாதங்களாக நிகழ்ந்தது. எனவே, அதைத் தவிர்ப்பதற்காகவே அமைச்சர்கள் கூடி ஒன்றுக்குப் பலமுறை ஆலோசனை நடத்தித்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள். அம்மா விட்டுச்சென்ற கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே இதற்குக் காரணம். “மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு” என்று பேரறிஞர் அண்ணா சொன்ன வார்த்தையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இனி அதிமுகவின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

1989-ல் நடந்தது போலவே இரட்டைஇலை மீண்டெழும். ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் உற்சாகம்கொள்ளும் வகையில் வேரில்விட்டால், இலைகள் தளிர்க்கும் என்பதைப் போல இந்த இயக்கம் பொலிவு பெறும்; வலிவுபெறும். அம்மாவின் கடைசி ஆசையான அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் நூறாண்டுகள் வாழும்; மக்களுக்குத் தொண்டூழியம் செய்யும்.

கட்சியை வழி நடத்த வலிமையான தலைமையை நியமிக்காமல், குழு அமைப்போம் என்பது சிக்கலை மேலும் அதிகப்படுத்தாதா?

எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஒரு தலைவர் இப்போது இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். அம்மாவின் மரணம் உருவாக்கிய வலிமையான தலைமை என்ற வெற்றிடத்தைக் காலம் தீர்மானிக் கட்டும். தற்போதைய நிலையில் கூட்டுத் தலைமை என்பதே ஜனநாயகத் தன்மையோடு பார்க்க வேண்டும். முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்களும் இணைந்து ‘வழி நடத்தும் குழுவில் இருப்பார்கள்’ என நினைக்கிறேன். அதிமுக வைப் பொறுத்தவரை இதை அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும். தனிநபர் சார்ந்து இயங்கிய இந்த இயக்கம், கூட்டுத் தலைமை எனும் ஜனநாயகப் பண்பை நோக்கி நகர்ந்திருக்கிறது.

கட்சியும் ஆட்சியும் கொங்கு மண்டல அதிமுகவின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது என்று பேசப்படுகிறதே?

இந்தக் கருத்து அடிப்படை இல்லாதது. அதிமுக என்பது சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் சங்கமிக்கும் இயக்கம். அதேநேரத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அம்மாவுக்கு அரசியல் அங்கீகாரத்தைக் கொடுத்தது கொங்குப் பகுதி. சேவல் சின்னத்தில் அந்தப் பகுதியில் பெற்ற இடங்கள்தான் அம்மாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும், அதிமுகவின் ஒற்றை அடையாளம் என்ற வெளிச்சத்தையும் தந்தது. தற்போது அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது கொங்கு மண்டலப் பகுதியில் கிடைத்த பிரம்மாண்டமான வெற்றிதான் என்பதையும் மறந்து விடக்கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x