பணி முடிந்தும் திறக்கப்படாத ஸ்டான்லி ரயில்வே சுரங்கப் பாதை

பணி முடிந்தும் திறக்கப்படாத ஸ்டான்லி ரயில்வே சுரங்கப் பாதை
Updated on
1 min read

ஸ்டான்லி ரயில்வே சுரங்கப் பாதை பணி முடிந்து, 4 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், அச்சுரங்கப் பாதை சிறுவர்களின் விளையாட்டு மைதானமாகிவிட்டது.

வடசென்னை மக்கள் 40 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே எம்.சி. சாலையில், ரயில் பாதையை எளிதாக கடக்க

சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, ரூ.15.76 கோடி செலவில் ஸ்டான்லி ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்ட அப்பணி, மெதுவாக ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடந்து ஒரு வழியாக, கடந்த 4 மாதங்களுக்கு முன் முடிந்துவிட்டது.

ஆனால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, ஸ்டான்லி சுரங்கப் பாதையை திறக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.

எனவே, மாநகராட்சியை கண்டித்து, கடந்த டிசம்பர் 20 மற்றும் பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில், வடசென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், திமுகவினரும் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும், ஸ்டான்லி சுரங்கப் பாதை இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படாத ஸ்டான்லி சுரங்கப் பாதையை விளையாட்டு மைதானமாக மாற்றி, வலை கட்டி, வாலிபால் விளையாடி வருகிறார்கள்.

இதைப் பார்க்கும் பொதுமக்கள், கோடிக்கணக்கான ரூபாயில் கட்டப்பட்ட ஸ்டான்லி சுரங்கப் பாதையை போக்குவரத்துக்கு திறந்து விடாமல் இப்படி சிறுவர்கள் விளையாடும் மைதானமாகி விட்டதே என்று வருத்தப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in