

இந்தியாவில் ஒரு பக்கம் வறட்சி, மற்றொரு பக்கம் வெள்ளப் பெருக்கு என்ற நிலைதான் உள்ளது. முக்கிய நதிகளை இணைப்பதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ‘‘நதி நீர் இணைப்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் மத்திய அரசு அதற்கான கமிட்டியை அமைக்கவில்லை’’ என குற்றம்சாட்டினார்.
தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நதி நீர் இணைப்புக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகளைத் தொடுத்து வருகிறார். 1983-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவில், ‘நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். கங்கை, காவிரி, நெய்யாறு, பாலாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட அனைத்து பெரிய நதிகளையும் இணைக்க வேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள அச்சன்கோவில் மற்றும் பம்பை நதிநீர் ஆதாரங்களை, தூத்துக்குடி வைப்பாற்றுடன் இணைக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இதுகுறித்து தமிழக அரசும் மத்திய அரசும் விரைந்து முடிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் 1994-ல் உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமும் நதி நீர் இணைப்பை வலியுறுத்தினார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தபோது, அப்போதைய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. இந்தக் கமிட்டி, சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் செய்த மனு மற்றும் அப்துல் கலாமின் கோரிக்கை தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் எழுதிய கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த 2012 பிப்ரவரியில் ரஞ்சித் குமார் என்ற வழக்கறிஞரை நியமித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பின்னர் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தலைமையில் பல்வேறு மாநிலங்கள், மத்திய, மாநில அமைச்சகங்களின் பிரதிநிதிகள் 38 பேர் கொண்ட கமிட்டியை நியமிக்க வேண்டும். இந்தக் கமிட்டி, 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, நதி நீர் இணைப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் கூறியிருந்தது.
ஆனால், மத்திய அரசு இதுவரை நதிநீர் இணைப்புக் கமிட்டியை அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால், அடுத்து அமையப்போகும் புதிய ஆட்சியிலாவது நதிநீர் இணைப்புக்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கும் கமிட்டியில், வழக்கு தொடர்ந்தவன் என்ற முறையில் என்னையும் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளேன். நதிநீர் இணைப்பு பிரச்சினையில் மத்திய அரசு அலட்சியமாக இருப்பதால், உச்ச நீதிமன்றமே நேரடியாக சிறப்புக் கமிட்டியை அமைக்க வேண்டும். அந்தக் கமிட்டியின் நடவடிக்கைகளை கண்காணித்து, விரைவில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.