Last Updated : 27 Mar, 2017 09:44 AM

 

Published : 27 Mar 2017 09:44 AM
Last Updated : 27 Mar 2017 09:44 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: பாலியல் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம்! - ஷாலினி, உள நலவியல் நிபுணர்

பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாத காலம் இது. சமீபத்தில் ‘சுசிலீக்ஸ்’ எனும் பெயரில் ‘ட்விட்ட’ரில் வெளியான சில அந்தரங்கப் புகைப்படங்களும், அதற்குத் திரைத் துறையினரின் எதிர்வினைகளும் சமூகத்தின் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்ற சூழலில், உள நலவியல் நிபுணர் ஷாலினியிடம் பேசினேன்.

ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், சுசிலீக்ஸ் பரபரப்பாகப் பேசப்பட்டதே?

ஒட்டுமொத்த சமூகத்தின் உளவியல் பிரச்சினையாகவே இதனை அணுக விரும்புகிறேன். காலங்காலமாக அடுத்தவரின் கலவியல் உறவு சார்ந்த விவகாரங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாகரிக வளர்ச்சி அடையாத கிராமத்தில், பண்ணையாரின் பாலியல் அக்கிரமங்களை ஊரார் பேசியதைப் போல, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலத்தில், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தரங்கப் புகைப்பட வெளியீட்டை நள்ளிரவு வரை காத்திருந்து பார்க்கும் மனநிலை பற்றி?

நம்முடைய நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் அளவுக்கு மீறிய கலவியல் ஒழுக்கம் நிறைந்தவர்களாக நடிக்கிறார்கள். இதே நடிகர்கள் நிஜ வாழ்வில் எப்படி வாழ்கிறார்கள் என்பது பத்திரிகைகளில் கிசுகிசுவாக வெளியாகிறபோது, அதைப் படிக்கவும், பகிரவும் மக்கள் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

இன்றைய தலைமுறை தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களா?

இல்லை. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் பாலியல் உறவை வெளிக்காட்டிக்கொள்ளும் போக்கு இருக்கிறது. பல நிலைக் கலவியல் முறைகளை முப்பரி மாண வடிவில் கோயில்களில் வடித்து வைத்திருக்கிறார்கள். ஏராளமான ஓவியங்களையும், கதைகளையும் உலவவிட்டி ருக்கிறார்கள். இன்றைய தலைமுறை செல்போன், கேமரா போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாகத் தங்களது கலவியலைக் காட்சிப் படுத்துகிறது. காமரூப சிலைகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதைப் போலவே, இதனையும் கடந்து செல்ல வேண்டும்.

இந்தப் போக்கின் காரணமாக நிறைய பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்களே... பாலியல் பழிவாங்கல்களும் அதிகமாகி வருகின்றனவே?

காலங்காலமாக ஆண்கள் பாலியல்ரீதியாகவே பெண்களை இழிவுபடுத்தி வருகிறார்கள். தற்போது பெண்களும் தங்களது பழிவாங்கலைப் பாலியலை அடிப்படையாகக்கொண்டே அரங்கேற்றுகிறார்கள். பழிவாங்கலுக்குப் பாலியலைக் கையிலெடுத்தால் தேவையற்ற சிக்கலில் போய் முடியும். பாலியலைக் கொண்டு அவமானப்படுத்தும் போக்கு ஏற்புடையதல்ல. பாலியல் குற்றச்சாட்டை எல்லாம் பெண்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

‘ஐயோ, மானம் போய்விட்டதே’ என்றோ, அவமானப்படுத்தப்பட்டதாகவோ நினைக்கக் கூடாது. அதனை அலட்சியப்படுத்துவதன் மூலமாகப் பெண்ணின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அடிப்படையில், பாலியல் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு முதலில் மாற வேண்டியது, ‘ஆண் செய்தால் குற்றமில்லை, பெண் செய்தால் குற்றம்’ என்ற போக்குதான்.

தமிழ்ச் சமூகத்தில் கற்புநெறி குறித்த கற்பிதம் ஆழமாக வேரூன்றி இருக்கிறதே?

நமது மத புராணங்களிலும், இலக்கியங்களிலும் கற்புநெறி குறித்து ஏராளமாகச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, கண்ணகி கதாபாத்திரம் உளவியல் சிக்கலால், தனது மார்பையே அறுத்துக்கொண்டது. இப்படி ஒருவரை ஏன் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண்களுக்கும் உதாரணமாக்க வேண்டும்? எனவேதான் கண்ணகிக்குச் சிலை அமைக்க பெரியார் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தச் சிலை சமூகத்தில் தவறான நம்பிக்கையை ஏற்படுத்திவிடும் என்றார். பெரியார் தன் மனைவிக்குக் கொடுத்த சுதந்திரத்தை ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x