Published : 06 Oct 2014 08:28 PM
Last Updated : 06 Oct 2014 08:28 PM

தி இந்து தமிழ் - ஒரு சமூக அமைப்பு: கல்வியாளர் கே.துளசிதாசன்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரியைத் தொடர்ந்து திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித வளனார் கல்லூரி (செயின்ட் ஜோசப் கல்லூரி) ஜூப்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக். பள்ளியின் முதல்வர் கே.துளசிதாசன் பேசியபோது, "இப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. சமூகத்தை உருவாக்குகிற ஆசிரியர் சமூகம் படிக்காவிட்டால் மொத்த சமூகமும் பின்தங்கிவிடும்.

ஒருவர் ஆசிரியர் வேலைக்கு வந்துவிட்டால் அவருடைய வாசிப்பு அன்றுடன் முடிந்துவிடுகிறது. இப்படி, ஒரு துறையில் ஒருவர் வேலைக்கு சேர்ந்த பிறகு வாசிப்பதை நிறுத்திவிட்ட நிலையில் ஒரு நாளிதழாக 'தி இந்து' தமிழ், அவர்களை வாசிக்கத் தூண்டி அறிவூட்டுகிற ஒரு சமூக நிறுவனம் என்பதாக நான் பார்க்கிறேன்.

வெகுஜனங்களால் அறியப்படாத சிறுபத்திரிகையிலுள்ள புதிய ஆளுமைகளை, அறிஞர்களை 'தி இந்து' தமிழ் அறிமுகப் படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு மொழி, அரசியல், கலாசாரம் குறித்த மாற்று சிந்தனையை முன்வைத்து நவீன எழுத்தையும், இலக்கியத்தையும், ஆளுமைகளையும் அறிமுகப் படுத்திய ஒரு சமுதாய அமைப்பாக 'தி இந்து' தமிழ் உள்ளது.

தான் படித்து வந்த பாடப்புத்தகத்தின் கருத்துகள் போதும் என்று ஒரு சாதாரண மனோபாவத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் கூற்றையும் இன்றைய போக்கையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் ஒரு சமூக அமைப்பாக 'தி இந்து' தமிழ் அளிக்கிறது.

சுயமரியாதை, பகுத்தறிவு என்று அதிகமாக பேசப்பட்ட தமிழ்நாட்டில் இன்று அதற்கான இடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதனால், இளைஞர்களிடையே புதிய கருத்தை உருவாக்குவதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x