கோவை: சாமானியனின் `வசந்தமாளிகை!

கோவை: சாமானியனின் `வசந்தமாளிகை!
Updated on
1 min read

மக்களுக்கு கொடுக்கப்படும் நலத் திட்டங்கள் முழு வடிவம் பெறுவது அதன் உபயோகத்திலேயே உள்ளது. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பது போல தேவைப்படும் இடத்தில் தேவையான பொருள் இருக்காது, தேவையே இல்லாத இடத்தில் பலவும் காட்சிப் பொருளாய் வைக்கப்படும். இது மாவட்ட நிர்வாகத்திலும் சரி, உள்ளாட்சி நிர்வாகத்திலும் சரி இயல்பான ஒன்று. ஆனால், குறைந்தபட்சம் அந்த நலத் திட்டம், பயன்படுத்தப்படுகிறதா என்றாவது அதிகாரிகள் கண்காணிப்பது அவசியம்

கோவை மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட மதுக்கரை - பாலத்துறை செல்லும் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ளது ஒரு கழிப்பறை. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சாய்தளத்திலிருந்து அனைத்து வசதிகளுடன் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இதை தற்போது யார் பயன்படுத்துகிறார்கள்? எப்படி பயன்படுத்துகிறார்கள்? எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

பாதாளச்சாக்கடை குழாய்களை சாலையோரம் சில நாட்கள் போட்டு வைத்தாலே சில நாடோடிக் குடும்பங்கள் அதில் குடியேறிவிடும். டைல்ஸ் பதித்து கட்டப்பட்ட இந்த கழிப்பறையை ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தாமல் விட்டால் சும்மா விடுவார்களா. தற்போது இது கழிப்பறை அல்ல. பெயர் கூற விரும்பாத ஒரு நபரின் வசந்தமாளிகையாக மாறிவிட்டது. ஆம். அவருக்கு அது வசந்தமாளிகைதான். படுக்கை, தலையணையுடன் தனியே ஒருவர் வாழ ஏற்ற வீடாக கழிப்பறை அவரது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

அவரைச் சொல்லி குற்றம் இல்லை. யாருமே பயன்படுத்தாத பொருள் ஒருவருக்கு வேறொரு வகையில் பயன்படுகிறது. ஆனால் பயனில்லா இடத்தில் கழிப்பறையை கட்டியது, அதைக் கண்டு கொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?.

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் குறித்து கோவை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் திருஞானம் கூறுகையில், கோவையில் 33 பஞ்சாயத்துக்களில் இதுபோன்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருபாலருக்குமான கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா 2.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், நபார்டு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே இருக்கும் சாதாரண கழிப்பறைகளுடன் சேர்த்து 32 கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் 8 கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளன. நிதி ஒதுக்கீடு, கட்டுமானத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் பணி முடிந்துவிடும். மேற்கொண்டு அதை கண்காணித்து, பராமரிப்பது பேரூராட்சிகளின் பணி என்றார்.

ஆனால் பயன்பாடு உள்ள இடத்தில் கட்டப்படாத மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், இங்கு எதற்கு என யாரும் கேள்வி எழுப்பவில்லை. இனியாவது இந்த கழிப்பறை எங்கு உள்ளது? அதை யார் பயன்படுத்துகிறார்கள்? என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிந்துகொண்டால் சரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in