மதுரை: ஓராண்டு நிகழ்ந்த விபத்துகளில் 689 பேர் இறப்பு
மதுரை மாவட்டத்தில் ஓராண்டு காலத்தில் நிகழ்ந்த விபத்துகளில் 689 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் 2-வது பெரிய நகரமான மதுரை தென்மாவட்டங்களின் தலைநகராக விளங்கி வருகிறது.
இந்த மாவட்டத்துடன் சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம் போன்ற இடங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள், நகரங்களை இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைகள், பேரூர், கிராமங்கள் இடையே பஞ்சாயத்து யூனியன் சாலைகள் மற்றும் மதுரை மாநகர பகுதிக்குள் மாநகராட்சி சாலைகள் என மாவட்டம் முழுவதும் சுமார் 3,200 கி.மீ. நீளத்துக்கு தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாள்தாறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கவனக்குறைவு, அலட்சியம்
சாலைகள் மற்றும் வாகனங்களை முறையாகப் பராமரிக்காதது, வாகனங்களை அதிவேகமாகச் ஓட்டிச் செல்லுதல் போன்ற காரணங்களால் அடிக்கடி இந்த சாலைகளில் விபத்து நிகழ்கின்றன. நடப்பாண்டில் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு உள்பட்ட 44 காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்த விபத்துகளில் 560 பேர் உயிரிழந்துள்ளனர். 1835 பேர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 139 பேர் இறந்துள்ளனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் ஓராண்டில் 689 பேர் இறந்துள்ளனர்.
விதிகளைப் பின்பற்ற வேண்டும்
இந்த எண்ணிக்கை வரும் ஆண்டிலாவது குறைய காவல்துறை, போக்குவரத்துத் துறை உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் விபத்துகளில் சிக்காமல் இருக்க, விதிமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்ட பொதுமக்களும் முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் மேலோங்கியுள்ளது.
