

இந்து ஆபிஸ் அண்ட் நேஷனல் பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் தன்னுடைய 57-ம் ஆண்டு விழாவை, சென்னை அசோகா ஓட்டலில் வியாழக்கிழமை கொண்டாடியது. இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.
‘தி இந்து’ நிறுவனத்தின் இந்நாள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பெருந்திரளாகக் கூடி நடத்திய இக்கொண்டாட்டத்தில் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். கமலநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சங்கத் தலைவர் இ.கோபால் தலைமையுரையாற்றினார். 57 ஆண்டுகளாக தொழிற்சங்கமும், ‘தி இந்து’ குழும நிர்வாகமும் கைகோர்த்து செயல்பட்டு வந்த விதம் குறித்து விரிவாக பேசிய அவர், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் புதிதாக வெளியானதன் மூலம் இக்குழுமத்தின் மற்றுமொரு நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது என்றார்.
தொழிலாளர்களின் நலனே தங்கள் நலன் என்று எப்போதும் கருதிவரும் குழும இயக்குநர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்தார்.
“தி இந்து” குழுமத்தின் இணை சேர்மன் என்.முரளி, தொழிற் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து இறுதியாக உரை நிகழ்த்தினார்.
‘தி இந்து’ குழுமம், 135 ஆண்டுகளில் எப்போதுமே தொழிலாளர்களின் நலனையும், வாசகர்களின் நன்மதிப்பையும்தான் பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக அவர் விவரித்தார்.
‘தி இந்து’ நிறுவனத்தின் இயக்குநர்கள், பங்குதாரர்கள் ஆகியோருடன் தொழிலாளர்களும், வாசகர்களும் ஒருங்கிணைந்த குடும்பமாக பிணைப்புடன் இருப்பதுதான் இந்நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடிப்படை காரணம் என்றார். இறுதியில், தொழிலாளர்களுக்கு தனது உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகளையும் அவர் தெரி வித்துக் கொண்டார்.