

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிழைப்புத் தேடி வருபவர்களை அரவணைத்துக் கொள்ளும் ஊர் திருப்பூர். இங்கு தற்போது ஆந்திரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்துள்ளனர் ஒரு சிறு குழுவினர். எல்லோரும் திருப்பூரை நம்பித்தான் வருவார்கள். ஆனால், இவர்கள் வித்தியாசமாக தாங்கள் வைத்திருக்கும் பூம் பூம் மாட்டை நம்பி வந்திருப்பதாக சிலாகித்துச் சொல்கின்றனர்.
ஆண்டிபாளையம் குளக்கரையில், 8 பேர் வரை சிறுகுழுவாக வாழ்ந்து வருகின்றனர். பூம்பூம் மாடுகளுக்கு தேவையான அளவிற்கு, தீவனம் தந்து அன்றாடம் உபசரிக்கின்றனர். பனி படர்ந்த காலை வேளையில் அவர்களை சந்தித்துப் பேசியபோது கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்:
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து லாரிகளில் பூம்பூம் மாட்டை ஏற்றிக் கொண்டு, ஆயிரம் ரூபாய் செலவு செய்து திருப்பூருக்கு பிழைப்பு தேடி வந்துள்ளோம்.
பகல் முழுவதும் ஓய்வு, குளக்கரையில் சமைத்து சாப்பிடுவது, மரத்தடியில் உறங்குவது என பொழுது நகரும். மாலையில் மிகவும் சுறுசுறுப்போடு பிழைப்பிற்கு கிளம்பிவிடுவோம். பள்ளிகளில் இருந்து குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பும்போது கிளம்பிச் செல்வதால், குழந்தைகளுக்கு வேடிக்கை காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்துவது எங்களது நோக்கம்.
ஆந்திராவில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தோம். எங்க பகுதியில் விவசாயம் இல்லை. இப்படி ஊர் ஊராகப் போய் சம்பாதிக்கிறோம். குடும்பமும், குழந்தைகளும் இந்த பூம் பூம் மாட்டை நம்பித்தான் உள்ளனர். ஆந்திராவில் இந்த தொழில் செய்தாலும், பல்வேறு ஊர்கள் சென்று பழகிவிட்டதால் எங்களால் ஒரே ஊரில் நிலையாக இருந்து வாழ முடியாது. எங்கள் வாழ்க்கை முறை அப்படி...நாங்கள் அப்படி வாழ்ந்து பழகிவிட்டோம் என்கின்றனர்.
மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு, மாடுகளை அலங்காரம் செய்ய ஆரம்பித்தால் எப்படியும் 2 மணி நேரம் ஆகிவிடுகிறது என்றனர்.
ரசித்து, மிகவும் அழகாக மாட்டை அலங்காரம் செய்வதோடு, தங்களையும் அலங்கரித்துக் கொண்டு விறுவிறுவென கால்நடையாக பத்து கிமீ நடந்து, திருப்பூருக்குள் நுழைந்து பூம் பூம் மாட்டை காண்பித்து அன்றாட குடும்பச் செலவுக்கு பணம் சம்பாதிக்கின்றனர்.
தற்போது, திருப்பூர் ரயில் நிலையம், குமரன் சாலை, ஊத்துக்குளி சாலை என திருப்பூரை வலம் வரும் இவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது என்கின்றனர் திருப்பதியில் இருந்து வந்துள்ள பூம்பூம் மாட்டுக்காரர்கள். நாடோடி வாழ்க்கை முறையின் கடைசி தலைமுறை இவர்கள்.