

“தமிழக அரசு சட்டவிரோதமாக செயல்பட்டு முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துள்ளது. நீதிமன்றத்தில் வெற்றிபெற்று மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைப்பட்டுள்ளார். அவரை தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாகத் திரும்ப பெற்று, கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு இடித்துள்ளது.
இது தமிழக மக்களுக்கு எதிரான செயல். நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வெற்றிபெற்று மீண்டும், அந்த இடத்தில் முற்றச் சுவரைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசு செயல்படும் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளியே செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று செயல்களுக்கு மத்திய, மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.