

மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகள் ஓராண்டுக்கு மேலாக தாமதாகி வருகின்றன.
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பணிகள் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் தடத்தில் அக்டோபர் மாதம் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடத்தில் கோயம்பேடு, சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபழநி, அசோக் நகர், கே.கே.நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய 8 ரயில் நிலையங்கள் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், ஆலந்தூர் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளை இணைப்பதால் சாலை போக்குவரத்தையும் ரயில் போக்குவரத்தையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக இது அமைந்துள்ளது.
எனவே இந்த மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள சாலைகள் புதுப்பிக்கப்படும் என்றும் நடைபாதைகள், தளவாட வசதிகள் செய்து தரப்படும் என்றும் 2012-13-ம் ஆண்டிலேயே மாநகராட்சி அறிவித்தது. ஆனால் இதற்காக ரூ.29.5 கோடியில் 170 தார் சாலைகள் அமைக்க மட்டுமே ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ரூ.8.25 கோடியில் 73 கான்கிரீட் சாலைகள் அமைக்க இன்னமும் ஒப்பந்தங்கள் கோரப்படவில்லை. ஓராண்டுக்கு மேலாகியும் இந்தப் பணிகள் இன்னும் முடிக்கப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இதற்கான பணிகள் எதுவும் மே மாதம் வரை நடைபெற வாய்ப்பில்லை.
ஆனால் மெட்ரோ ரயில் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் அதன் பணிகள் தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்படாமல் வேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு பிறகு மெட்ரோ ரயிலின் முதல் தடம் செயல்பட 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த பணிகளை மாநகராட்சி அவசர அவசரமாக செய்ய வேண்டியிருக்கும்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “துறைவாரியாக செய்யப்பட வேண்டிய வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் தேர்தல் முடியும் வரை பணிகளை ஆரம்பிக்க முடியாது” என்றார்.