

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தொடர்ந்து சடலங்கள் கைப்பற்றப்படுவதால் அதன் அடையாளம் மாறி வருகிறது. கொட்டும் அருவி, சீறிப் பாயும் காவிரி, எழில் கொஞ்சும் இயற்கை அழகு ஆகியவற்றை அடையாளமாகக் கொண்டிருக்கும் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அடையாளம் தெரியாத ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில், ஆற்றில் 70 வயது முதியவர் சடலம் கிடந்தது. சில நாட்களுக்குப் பிறகு காதல் ஜோடியின் சடலம் மீட்கப்பட்டது. அவர்கள் கர்நாடகம் அல்லது ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர். பின்னர், மேலும் ஒரு ஆண் சடலம் ஒகேனக்கல் காவிரியில் மீட்கப்பட்டது. இந்த நான்கு சடலங்களும் தருமபுரி அரசு மருத்துவனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டன.
மூவரின் சடலங்கள் தண்ணீரில் ஊறி மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சில நாட்களுக்கு முன்பு அவை தருமபுரி பச்சியம்மன் கோயில் அருகில் உள்ள தகன மேடையில் எரிக்கப்பட்டன. ஒரு சடலம் மட்டும் தருமபுரி அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒகேனக்கல் சின்னாற்று பகுதியில் கோணாங்கொத்து என்ற இடத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது தெரிய வந்தது. குட்டையில் கிடந்த அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த இடத்திலேயே பிரதப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
சில வாரங்கள் முன்பு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஒகேனக்கல்லில், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த 12 வயது சிறுவனை ஒகேனக்கல்லுக்கு அழைத்து வந்த உறவினர், அவனைக் கொலை செய்தார். சிறுவனின் குடும்பத்தாரைப் பழிவாங்க அந்த கொலை நடந்ததாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
இதேபோல், ஒகேனக்கல்லில் தற்கொலை, கொலை, விபத்து சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இதனால் ஒகேனக்கலுக்கு ‘உயிர்ப்பலி தலம்’ என்ற அடையாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனால் பிரபல சுற்றுலா மையமான ஒகேனக்கல்லின் வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, காவல் துறையும், சுற்றுலாத் துறையும் இணைந்து ஒகேனக்கல் மீது கூடுதல் அக்கறையும், கண்காணிப்பும் செலுத்த வேண்டும். உரிய நடவடிக்கைகள் மூலம் உயிர்ப் பலி நிகழாத சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல்லை மாற்ற வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.